Friday, May 1

அனந்தா _ விமர்சனம்

Loading

அனந்தா _ விமர்சனம்

பாபா என்று பக்தர்களால் அழைக்கப்படும் புட்டபர்த்தி சாய்பாபா, மனமுருகி தன்னிடம் வேண்டும் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை அழகாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் தொகுத்து வழங்கப்பட்டிருக்கும் படம் தான் அனந்தா.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ‘பாட்ஷா’  ‘அண்ணாமலை’ என்று மகத்தான வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, வணிக வெற்றிக்கு தேவைப்படும் எந்தவித மசாலாவும் இல்லாமல் பாபாவுடன் ஏற்பட்ட ஆன்மீக அற்புதங்களை மட்டும் பக்தி மணம் கமழ வழங்கியிருக்கும் படைப்பு அனந்தா.

பாபாவின் முழுமையான வாழ்க்கை வரலாறோ அல்லது வாழ்க்கை சம்பவங்களின் ஒரு பகுதியோ இதில் இடம்பெறவில்லை.

மாறாக ஐந்து பக்தர்கள், பாபா தங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை விளக்குவதுபோல் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் துவக்கத்தில் வரும் ஜெகபதி பாபுவின் ஆன்மீக அனுபவம், விமான பயணத்தில் துவங்கும் ‘வசந்த மாளிகை’ படத்தின் முதல் காட்சியை நினைவூட்டுகிறது.

ஒய் ஜி மகேந்திராவின் அனுபவமோ மிகவும் வித்தியாசமானது.

பக்தர்கள் வேண்டிய வரங்களை கொடுத்துதானே பாபா எல்லோருக்கும் ஆசி வழங்குவார்?

ஆனால் தன் மனைவியுடன் மிகத் தீவிரமாக பாபாவை வணங்கி வரும் ஒய் ஜி மகேந்திராவின் அனுபவமோ முற்றிலும் மாறுபட்டது.

திடீரென மனைவி மயக்கமடைந்து இறந்து விடவே, தன்னை கைவிட்ட பாபாவின் மீது நம்பிக்கை இழந்து வணங்க மறுக்கிறார் ஒய் ஜி மகேந்திரா.

புட்டபர்த்திக்கு சென்ற பிறகுதான் மனைவிக்கு பாபா இந்த உலகில் இருந்து விடுதலை கொடுத்திருக்கிறார் என்ற உண்மையையும், அதற்கான காரணத்தையும் புரிந்து கொண்டு மீண்டும் பாபாவின் புகழ் பாட தொடங்குகிறார்.

இதேபோல் வட இந்தியாவில் வசித்து வரும் பக்தை சுகாசினியின் அனுபவமும் நெகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது.

கொள்ளை முயற்சியில் ஈடுபடும் சில கொள்ளையர்களை பாபா மனம் மாற்றும் அனுபவமும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

சஞ்சயின் ஒளிப்பதிவும், தேவாவின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன.

படத்தில் உள்ள மிகப்பெரிய குறை என்னவென்றால் விறுவிறுப்பான திரைக்கதை இல்லாதது மட்டுமே.

இதை மட்டும் சரி செய்திருந்தால் ‘அனந்தா’ படம் பார்வையாளர்களுக்கு ‘ஆனந்தமான’அனுபவமாக அமைந்திருக்கும்.