![]()
அம்மா அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த கீதா கைலாசம் பிரதான வேடத்தில், டைட்டில் ரோலில் நடித்திருக்கும் படம் அங்கம்மாள்.
கணவரை இழந்து வாழும் கீதாவின் மகன் பரணி ஒரு விவசாயி. மற்றொரு மகனான சரண் ஒரு மருத்துவர்.
முரட்டு பிடிவாத குணம் கொண்ட அங்கம்மாள் தனது இரண்டு மகன்கள் மற்றும் பரணியின் மனைவி தென்றல் ரகு நாதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.
அவரது பேச்சுக்கு யாரும் எதிர்ப் பேச்சை பேச முடியாது.
பணக்கார பெண்ணான முல்லையரசியை சரண் காதலிக்கிறார்.
ஜாக்கெட் அணியும் பழக்கம் இல்லாத தன் தாயார் கீதா கைலாசத்தை, திருமணம் பேச தன் வீட்டுக்கு வரும் காதலி முல்லையரசியின் உறவினர்கள் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என நினைக்கிறார் சரண்.
எனவே நேரடியாக அம்மாவிடம் சொல்ல பயப்பட்டு, தன் அண்ணி தென்றல் ரகுநாதன் மூலம் சொல்கிறார்.
இதனால் குடும்பத்தில் பிரச்சனை பெரிதாக வெடிக்கிறது.
இந்தப் பிரச்சனையின் முடிவு என்ன என்பதுதான் அங்கம்மாள் படத்தின் கதை.
சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை இது.
இவரது கதை ஒன்று ஏற்கனவே ‘சேத்து மான்’ என்ற பெயரில் படமாக்கப்பட்டு பரவலான கவனத்தை ஈர்த்தது.
இப்போது ‘கோடித் துணி’ என்ற சிறுகதையை தழுவி அங்கம்மாள் என்ற அருமையான திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
எள்ளலும் ஏகத்தாளமுமாக சுருட்டு புகைத்தபடி வசனம் பேசும் கீதா கைலாசம் மொத்த படத்தையும் தாங்கி பிடித்து இருக்கிறார்.
மற்றும் மகனாக வரும் ‘நாடோடிகள்’ பரணி, மருமகள் தென்றல் ரகுநாதன் மற்றொரு மகன் சரண் ஆகியோரும் கொடுத்த பாத்திரங்களை நிறைவாகவே செய்திருக்கின்றனர்.
வறண்ட நிலப்பரப்பை நம் கண் முன்னே கொண்டு வந்த கேமராமேன் அஞ்சு சாமுவேலின் ஒளிப்பதிவு படத்தை உண்மைக்கு நெருக்கமாக நிறுத்தி இருக்கிறது.
முகமது மக்பூல் பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.
சிறந்த படங்களுக்கான போட்டியில்இடம்பெற்று, மற்ற படங்களுக்கு டஃப் கொடுக்கும் படம் அங்கம்மாள் என்றால் மிகையாகாது.
மதிப்பெண் 4/5


