Friday, October 23

அரண்மனை 4 _ விமர்சனம்

Loading

அரண்மனை 4: விமர்சனம்

திகிலும், நகைச்சுவையும் கலந்து கட்டும் அரண்மனை வரிசையில் சுந்தர் சி அளிக்கும் நான்காவது திரைப்படம் அரண்மனை 4.

வழக்குரைஞராகப் பணியாற்றும் சுந்தர் சியின் தங்கையான தமன்னா, காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார். அவரைப் பற்றிய தகவலே பத்து வருடங்களாக இல்லை.
இந்த நிலையில் அவரும் அவரது கணவரும் இறந்துவிட்டதாக வரும் செய்தி கேட்டு பதறுகிறார் அண்ணன் சுந்தர் சி.

உடனே, தமன்னா வாழ்ந்த அரண்மனைக்கு தனது அத்தையுடன் வருகிறார்.

தங்கை தற்கொலை செய்துகொள்ளவில்லை… கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்று உணர்கிறார். கொலைக்கான காரணத்தை ஆராய ஆரம்பிக்கிறார்.

அப்போது ஓர் அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. நிலத்திலும் நீரிலும் வாழும் ‘பாக்’ என்ற அமானுஷ்ய தீயசக்தி வட நாட்டில் இருந்து தமிழ்நாட்டு கிராமத்துக்கு வருகிறது. சிலரை அந்த தீய சக்தி கொலை செய்கிறது. அந்த கொலை வரிசையில், தமன்னாவின் குழந்தையும் இருப்பதை அறிகிறார் சுந்தர் சி.

தமன்னாவும் அவர் கணவரும் கொலை செய்யப்பட காரணம் என்ன… குழந்தையை கொல்ல பேய் துடிப்பது ஏன், குழந்தையை சுந்தர் சி காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை.

சுந்தர் சி, ராசி கண்ணா, தமன்னா, (வில்லன்) ராமச்சந்திர ராஜூ என அனைவருமே தங்கள் பாத்திரத்துக்குத் தேவையான அளவு நடிப்பைக் கொடுத்து இருக்கின்றனர்.

நகைச்சுவைப்பட்டாளமே இருக்கிறது. யோகி பாபு, வி.டி.வி. கணேஷ், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், டெல்லி கணேஷ், லொள்ளு சபா சேசு என்று அனைவருமே சிரிக்க வைக்கின்றனர்.

அரண்மனை வரிசை படம் என்பதால், கிளைமாக்ஸில் குஷ்புவின் அம்மன் ஆட்டம் உண்டு. இதில் சர்ப்ரைஸாக, சிம்ரனும் சேர்ந்து ஆடுகிறார். ரசிக்கவைக்கும் ஆட்டம்.

பார்ப்பதற்கே பயமாக இருக்கும் பிரம்மாண்ட அரண்மனை, அமானுஷயங்களை தன்னில் புதைத்துக் கொண்டிருக்கும் மிரட்டலான காடு என லொகேசன்கள் படப்பிடிப்பு தளங்களே பயத்தை வரவழைக்கின்றன. இவற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் சிஜி காட்சிகளும் பயமுறுத்தலுக்கு பக்க பலமாக நிற்கின்றன.

ஹிப்ஹாப் தமிழா இசை, பேய் படத்துக்கு ஏற்ற மாதிரி இதயத் துடிப்பை அதிகரித்து திகிலைத் தருகிறது. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு சிறப்பு.

இந்த சம்மரில் குழந்தைகள் கொண்டாட்டமாக கண்டு ரசிக்கக்கூடிய அரண்மனை 4 பெரியவர்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை.

அரண்மனை 4 – அனைரும் பயந்து, சிரித்து, ரசிக்கலாம்!

மதிப்பெண் 4/5