Friday, October 2

அஸ்வின்ஸ் – திரைப்பட விமர்சனம்

Loading

அஸ்வின் திரைப்பட விமர்சனம்

திகில் பட ரசிகர்களுக்கு திகட்டாத திரை விருந்தாக வந்த படம் அஸ்வின் என்று ஒரே வரியில் இப்படத்தை விமர்சனம் செய்துவிடலாம்.

தரமணி ராக்கி போன்ற வித்தியாசமான படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த வசந்த் ரவி நடித்திருக்கும் ஹாலிவுட் பாணியிலான திகில் திரைப்படம் அஸ்வின்ஸ்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சித்ரா சார்பில் பி வி எஸ் என் பிரசாத் தயாரிக்க தருண் தேஜா இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார்.

முன்னொரு காலத்தில் வாழ்ந்த விவசாயின் இரட்டை குழந்தைகளான மகன்கள் நீரில் மூழ்கி இறந்துவிட, அவர் தன் குழந்தைகளை பிழைக்க வைக்க அஸ்வின் தேவர்களிடம் மனம் உருகி வேண்டுகிறார்.

அஸ்வின் தேவர்கள் விவசாயி முன் தோன்றி ஒரு மகனை மட்டுமே பிழைக்க வைக்க முடியும் என்று சொல்லி ஒரு சிறுவனை மட்டுமே உயிர்ப்பித்து, இரண்டு குதிரை தலை பொம்மைகளை கொடுத்து விட்டு செல்கின்றனர்.

நரக ஆவி ஒன்று சிறுவனை ஏமாற்றி ஒரு சிலையை பறித்துச் சென்றுவிடுகிறது.

இதன் பிறகு அந்த கிராமத்தில் மனிதர்களும் மிருகங்களும் காரணம் இன்றி மரணிக்க, அசம்பாவிதங்கள் பலவும் தொடர்கின்றன.

மதங்கள் மற்றும் சடங்குகள் குறித்து தொல்பொருள் ஆய்வு செய்யும் ஒரு பெண்மணி தன் குழுவின்ருடன் இந்த மர்மங்கள் குறித்து அறிய புறப்பட, அவரது குழுவினர் கொல்லப்படுகின்றனர்.

தொல்பொருள் ஆய்வு செய்யும் அந்த இளம் பெண்ணும் தற்கொலை செய்து கொள்கிறார்.

லண்டனுக்கு அருகில் உள்ள தீவில் அமைந்திருக்கும் ஒரு மிகப் பெரிய மேன்ஷனில்தான் இந்தக் கொலைகளும் தற்கொலையும் நடந்திருக்கின்றன.

யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் வசந்த் ரவியும் அவரது நண்பர்கள் விமலா ரமணன், சரஸ்வதி மேனன், முரளிதரன், ஆகியோர் இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க புறப்படுகின்றனர்.

அவர்கள் எத்தகைய ஆபத்துகளை எதிர்கொண்டார்கள்? இறுதியில் அவர்கள் வெற்றி பெற்றார்களா… இல்லையா… என்பதுதான் அஸ்வின் படத்தின் கதை.

ஒளிப்பதிவு தரமாகவும் இசை மிரட்டலாகவும் இருந்தால்தான் திகில் படங்கள் சிறப்பாக அமையும்.

இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்தும், ஒளிப்பதிவாளர் எட்வினும் போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றி தங்கள் திறமைகளை நிரூபிக்க முயன்றிருப்பதால் அஸ்வின் அபாரமான திகில் படமாக அமைந்திருக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் சவுண்ட் எபெக்ட்ஸ் தான். சவுண்ட் டிசைனர்கள் சச்சின் மற்றும் ஹரி இருவரும் நம் இதயத்துடிப்பை அதிகப்படுத்தி அசத்தி இருக்கின்றனர்.

பிரம்மாண்ட மேன்சனில் மிகக் குறைவான ஒளியில்_அதுவும் பல காட்சிகளில் டார்ச் லைட் வெளிச்சம் மட்டும்தான்_ படமாக்கப்பட்ட உட்புற காட்சிகளும், பருந்து பார்வையில் படமாக்கப்பட்ட நீர்ப்பரப்பு காட்சிகளும் ஒளிப்பதிவாளரின் திறமைக்கு சான்று.

குறைவான எண்ணிக்கையில் நடிகர் நடிகையர் இருந்தாலும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

திகில் பட ரசிகர்களை வெகுவாக கவரும் அஸ்வின்ஸ், படமாக்கப்பட்ட விதத்துக்காகவும், தொழில்நுட்ப நேர்த்திக்காகவும் அனைவரும் ஒருமுறை தாராளமாக கண்டு ரசிக்கலாம்.

மதிப்பெண் 3.5/5