‘பயமறியா பிரம்மை’ _ விமர்சனம்

0

Loading

பயமறியா பிரம்மை’ _ விமர்சனம்

கொலையை செய்யும் கொலைகாரர்கள் தாங்கள் செய்த கொலையை நியாயப்படுத்துவதை படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் தான் செய்த கொலைகளை கலை என்று சொல்லும் ஒரு கொலைகாரனைப் பற்றிய படம்தான் ‘பயமறியா பிரம்மை’

சாகித்திய அகாடமி விருது பெற்ற  எழுத்தாளர் கபிலன், கொடூர சிறைக்கைதி ஜெகதீசை சந்திக்கிறார். அவன், 25 ஆண்டுகளில் 96 பேரைக் கொலை செய்தவன். அவன் வாழ்க்கையைக் கதையாக எழுதுவதே எழுத்தாளர் கபிலனின் எண்ணம்.

எழுத்தாளர் கபிலன் தன்னுடையஎழுத்துகளைப் படைப்புகள் என சொல்ல.. கொலைகாரன் ஜெகதீசும், தன்னுடைய கொலைகளும் படைப்புகள் என்கிறான்.

மேலும், தான் செய்த ஒவ்வொரு கொலையையும் விளக்கிச் சொல்கிறான். அதை ஜெகதீஷின் தோற்றத்தை வைத்துச் சொல்லாமல், புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களின் முகத்தை வைத்து சொல்கிறார்கள்.

எழுத்தாளராக வரும் வினோத் சாகர், கைதியாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஜெடி, ஜெகதீஸாக தங்களைக் கற்பனை செய்து கொள்பவர்களாக வரும் ஹரீஷ் உத்தமன், சாய் பிரியங்கா எனப் பலர் வந்து போகிறார்கள். எல்லோருடைய நடிப்பும் செயற்கைத் தனமாகவே இருக்கின்றது. விதிவிலக்கு.. குரு சோமசுந்தரம் மட்டுமே. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு நாவலை படிக்கும் வாசகர்கள்  ஒவ்வொருவரும், தங்களையே அந்த நாவலின் நாயகனாக கற்பனை செய்துகொள்கிறார்கள் என்பதும், ஒரு கதாபத்திரத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை திரையில் உலவவிட்டிருப்பதுமதான் சற்று புதுமை.

‘கே’யின் பின்னணி இசை, நந்தாவின் ஒளிப்பதிவு ஆகியவை ரசிக்க வைக்கின்றன.

ஒரு புத்தகம், அதைப் படிக்கும் வாசகர்கள் தங்களையே நாயகனாக உணர்ந்து கதை சொல்வது.. வித்தியாசமான ஐடியாதான். ஆனால் குழப்பமான திரைக்கதை. ஆகவே படத்துடன் ஒன்றமுடியவில்லை.

கொலைகாரன் ஜெகதீஸ் யார், அவனை கொலை செய்ய வைக்கும் மாறன் யார், ஏன் கொலை செய்தவர்களின் ரத்தத்தில் ஓவியங்கள் வரைகிறான்… ஒன்றும் புரியவில்லை.
தவிர, எழுத்தாளரும் கொலைகாரனும் பேசிக் கொள்ளும் தூய தமிழ் வசனங்கள் (பரி)சோதனை !
ஒவ்வொரு வசனத்திற்கு இடையிலும் பார்வையாளர்கள் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு இடைவெளி வேறு…

ரத்தத்தில் ஓவியம் வரைவதற்கு கடைசிவரை விளக்கம் சொல்லப்படவில்லை.

முடியல…

மொத்தத்தில்.. அயர்ச்சி!

Share.

Comments are closed.