![]()
பைக்கர் _ விமர்சனம்
மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களை உருவாக்குவதில் வல்லவர் டாக்டர் ராஜசேகர். அவரது மகன் சர்வானந்துக்கு தானும் ஒரு மோட்டார் சைக்கிள் பந்தைய வீரனாக வேண்டும் என்பதுதான் லட்சியம். இதற்காக தந்தையிடம் மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளகிறார்.
மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் மாளவிகா நாயருடன் சர்வாவுக்கு காதல் ஏற்படுகிறது.
இருவரும் நெருங்கி பழகவே மாளவிகா கர்ப்பம் அடைகிறார்.
இந்த செய்தி தந்தைக்கு தெரியக்கூடாது என்பதற்காக சர்வா அவரை விட்டு விலகி, மாளவிகாவை மணந்து கொண்டு வாழ்க்கையை தொடங்குகிறார்.
உலக அரங்கில் இந்திய மோட்டார் சைக்கிள் பந்தைய வீரர்களை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்ற டாக்டர் ராஜசேகரின் கனவுக்கு முட்டுக்கட்டை விழுகிறது.
சர்வானந்தின் ஸ்பான்சர் ஆன தொழில் அதிபர் அதுல் குல்கர்னி, டாக்டர் ராஜசேகர் மீது கோபம் கொண்டு அவரைப் பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்.
தந்தை மீது சுமத்தப்படும் அவதூறுகளை மகன் எப்படி தவிடு பொடி ஆக்குகிறார்? உலக அரங்கில் இந்திய மோட்டார் பைக் வீரர்களின் திறமை நிலை நாட்டப்படுகிறதா என்பதுதான் பைக்க படத்தின் பிற்பகுதி.
மகன் என்பதற்காக சற்றும் கனிவு காட்டாத கண்டிப்பான பயிற்சியாளர் வேடத்தில் டாக்டர் ராஜசேகர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தில் எந்த காட்சியிலும் நடிகர் சர்வானந்த் தெரியவில்லை; மறாக வெறிகொண்டு வெற்றியை தேடி ஓடும் பைக்கர் ஆகவே அவர் இப்படத்தில் தெரிகிறார்.
காதலியாக வரும்போது கவர்ச்சியாகத் தோன்றும் மாளவிகா நாயர், சர்வானந்தை பந்தயத்திற்கு அனுப்ப மறுக்கும் காட்சிகளில் கவனம் ஈர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.
இவர்கள் மகனாக வரும் குட்டி பையனின் சுட்டித்தனம் ரசிக்கும்படி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஜே யுவராஜின் கேமரா பந்தய ட்ராக்குகளில் பறக்கும் பைக்குகளை, பரபரப்பு நம்மை தொற்றிக் கொள்ளும் விதத்தில் படமாக்கி இருக்கிறது.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.
“நீ முதலில் வந்து விட்டாய் என்று சொல்லாதே… மற்றவர்கள் உனக்குப் பின்னால் வந்திருக்கிறார்கள்… ” என்பன போன்ற வசனங்கள் வெகுவாக ரசிக்க வைக்கின்றன.
சற்று கவனக் குறைவாக இருந்தாலும் டாக்குமென்டரி பாணியில் ஆன படமாக மாறியிருக்கக்கூடிய ‘பைக்கர்’ படத்தை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ரசிக்கத்தக்க படமாக கொடுத்த இயக்குனர் அபிலாஷ் ரெட்டி பாராட்டுக்குரியவர்.
பைக் ரேஸ் பிரியர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அட்டகாசமான படம்தான் ‘பைக்கர்’


