Monday, April 20

லீடர் _ விமர்சனம்

Loading

லீடர் _ விமர்சனம்

தூத்துக்குடியில் கார் மெக்கானிக்காக தன் மகளுடன் அமைதியான வாழ்க்கை நடத்தி வரும் லெஜெண்ட் சரவணன் வாழ்க்கையில் திடீரென ஒரு சூறாவளி வீசுகிறது.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஒரு கன்டெய்னர் மீது போலீஸ் அதிகாரி ஆண்ட்ரியாவின் சந்தேகப்பார்வை விழுகிறது.

அந்த கன்டெய்னரை வெளியில் கொண்டு வந்து சோதனை செய்ய திட்டமிடுகிறார் ஆண்ட்ரியா.

சர்வசாதாரணமாக துறைமுகத்தின் எல்லா நுழை வாயில்களிலும் சென்று வரும் சரவணனின் உதவியை இதற்காக நாடுகிறார் ஆண்ட்ரியா.

ஆனால் சரவணன் மறுத்து விட, அவரது செல்ல மகளை ரவுடிகள் கடத்தி வந்தது போல் செட்டப் செய்து நாடகமாடி அந்த கன்டெய்னரை துறைமுகத்திலிருந்து சரவணன் மூலமாகவே வெளியே கொண்டு வர வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து  கதையில் ஏற்படும் ‘ட்விஸ்ட்’ பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார செய்கிறது.

இதன் பிறகு கதையில் ஜெட் வேகத்தில் பறக்கிறது.

லெஜன்ட் சரவணனின் பின்னணி என்ன? அவரது குழந்தை தாயில்லாமல் வளர்வதன் காரணம் என்ன என்பதையெல்லாம் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆர் எஸ் செந்தில்குமார்.

சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டும் லெஜெண்ட் சரவணன், மகள் மீது பாசத்தை வெளிப்படுத்தும் சென்டிமென்ட் காட்சிகளில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார்.

அழகும் கவர்ச்சியும் கொண்ட கதாநாயகி பாயல் ராஜ்புத் நடிப்பிலும் தன் திறமையை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.

‘ஓனர்’ ‘ஓனர்’ என்று லெஜன்டால் அழைக்கப்படும் கார் ஷெட் உரிமையாளர் வேடத்தில் வரும் வி.டி.வி கணேஷ் காட்சிகளை கலகலப்பாக்கி இருக்கிறார்.

கம்பீரம் காட்டும் போலீஸ் உயர் அதிகாரி ஷாம், பிரதான வில்லன் சந்தோஷ் பிரதாப், மற்றும் பாகுபலி பிரபாகர் போன்றவர்கள் சிறிய வேடங்களில் வந்தாலும் நினைவில் நிற்கும்படி நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பது கேமராமேன் வெங்கடேஷின் ஒளிப்பதிவு தான். குறிப்பாக ‘வந்தே பாரத்’ ரயிலில் வரும் சண்டைக்காட்சி ஆங்கிலப் படத்துக்கு நிகராக படமாக்கப்பட்டிருக்கிறது.

ஜிப்ரானின் இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்து இன்னொரு தளத்துக்கு உயர்த்துகிறது.

‘லெஜன்ட்’ படத்தில் நடிகராக அறிமுகமான சரவணன் லீடர் படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக மாறி இருக்கிறார்.