Thursday, June 18

போட் _ திரைப்பட விமர்சனம்

Loading

போட் _ திரைப்பட விமர்சனம்

1943ம் ஆண்டு…

ஆங்கிலேயர் ஆட்சி காலம்..

இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டு இருக்கிறது…

வெள்ளையர்களின் ஆட்சியில் இருக்கும் சென்னையின் மீது குண்டு மழை வீசத் தயாராகிறது, எதிர்த் தரப்பில் இருக்கும் ஜப்பான்.

இதனால் பெரும்பாலான மக்கள், தங்கள் சொத்து சுகத்தை விட்டுவிட்டு வெளியேறுகின்றனர். வெட்ட வெளியில்தான் நீதிமன்றம், காவல் நிலையம், மருத்துவமனை எல்லாம் நடக்கின்றன.

இந்த நிலையில், மீனவரான யோகி பாபு கடற்கரையில் செயல்படும் காவல் நிலையத்துக்கு தனது பாட்டியுடன் வருகிறார். சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டு, ஆங்கிலேயரின் விசாரணையில் இருக்கும் தனது தம்பியை மீட்பதுதான் அவரது திட்டம்.

அந்த நேரத்தில் வானில் விமானங்கள் பறந்து வர… ஜப்பான் குண்டு வீசப் போகிறது என்று அலறியடித்து ஓடுகிறார்கள் மக்கள்.

மீனவர் யோகிபாபு ஒரு திட்டம் போடுகிறார். கடலுக்குள் போட்டில் சென்று விட்டால் தாக்குதலில் இருந்து தப்பித்துவிடலாம் என்கிறார். இதை அவரது பாட்டியும் ஏற்க, இருவரும் படகு ஏற தயாராகிறார்கள்.

அப்போது, அவர்களிடம் தஞ்சம் கேட்டு வட இந்தியர் சாம்ஸ், பிராமணர் சின்னி ஜெயந்த் – அவரது மகள் கௌரி கிஷன், கேரள இஸ்லாமியர் ஷாரா, சிறுவனான மகனுடன் கர்ப்பிணி
மதுமிதா, நூலகரான எம் எஸ் பாஸ்கர், ஆங்கிலேயே காவல் அதிகாரி ஆகியோரும் படகில் ஏறுகிறார்கள்.

படகு புறப்படுகிறது.

நடுக்கடலில் படகில் ஓட்டை ஏற்பட்டு மூழ்கும் நிலை.. மூன்று பேர் கடலில் குதிதித்தால்தான் மற்றவர்கள் தப்பிக்கலாம் என்கிறார் யோகிபாபு.. கடலில் சுறா ஒன்று, படகை சுற்றிச் சுற்றி வருகிறது.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதை திகிலுடன் சொல்கிறது போட்.

ஒட்டுமொத்த படத்தையும் சுமந்திருக்கிறார் யோகிபாபு. வழக்கமான காமெடி – அச்சு பிச்சு – இல்லாமல், கதையின் நாயகனாக கவர்கிறார். பிறரிடம் காண்பிக்கும் மனித நேயம், தன்னைப்போன்ற பூர்வ குடிகள் ஒதுக்கப்படுகிறார்களே என்கிற ஆதங்கம், வெள்ளையனிடம் காட்டும் ஆக்ரோஷம் என கைதட்ட வைக்கிறார்.

யோகிபாபுவை காதலிக்கும் கௌரி கிஷன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார். கர்ப்பிணியாக வரும் மதுமிதாவும் சிறப்பாக நடித்து உள்ளார். பிறருக்காக தனது உயிரை மாய்க்க தயாராகும் காட்சியில்  அவர் நெகிழ வைக்கிறார்.

பாட்டி ஷீலா, எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த் , சாம்ஸ், ஜெஸ்ஸி என எல்லோருக்குமே சிறப்பான கதாபாத்திரத்தை அளித்துள்ளார் இயக்குநர். அதை உணர்ந்து அனைவரும் சிறப்பாக நடித்து கவனம் ஈர்க்கின்றனர்.

கடல் என்ற ஒரே ஒரு லொகேசனிலேயே முழுப்படமும் எடுக்கப்பட்டிருந்தாலும் சுவாரஸ்யம் குறையாத அளவுக்கு விதவிதமான கோணங்களில் படம் பிடித்து ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்.

ஜிப்ரானின் இசையும் சிறப்பு.

படகில் இருப்பவர்களில் யார் தீவிரவாதி என்கிற டென்சன், உதவியவர்களையே கொலை செய்ய திட்டமிடும் மனிதர்கள், எலியையும் ஒரு கதாபாத்திரமாக உலவவிட்டிருப்பது என படம் முழுக்க சுவாரஸ்யம்தான்.

ஆங்கிலேயர், வட இந்தியர், பிராமணர்கள் ஆகியோரின் மனநிலையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன். பூர்வகுடிகளின் ஆதங்கத்தையும் அருமையாக பதியவைத்துள்ளார்.

மொத்தத்தில் ரசிக்க வைக்கும் படம்.