பேச்சி _ திரை விமர்சனம்
அடர்ந்த மலை வனத்தில், பேச்சி என்கிற கொடூர சக்தியிடம் சிக்கும் ஐந்து பேரின் கதைதான் பேச்சி.
டிரெக்கிங் செய்வதில் ஆர்வம் உள்ள ஐந்து பேர், நெடிதுயர்ந்து நிற்கும் மலை ஒன்றில் டிரெக்கிங் செய்ய வருகிறார்கள். அவர்களுக்கு உதவியாக வருகிறார் வனத்துறை கடை நிலை ஊழியர்.
இந்த ஊழியர், காட்டுப் பகுதியில் உள்ள சில இடங்கள் ஆபத்தானவை என்றும் அங்கே செல்ல வேண்டாம் என்றும் கூறுகிறார். ஆனால் அந்த நண்பர்கள் குழு அதைக் கேட்காமல், ‘பேச்சி’ என்கிறஅமானுஸ்ய சக்தி உள்ள பகுதிக்குள் சென்றுவிடுகிறார்கள். மரத்தில் அடக்கி வைக்கப்பட்டு இருக்கும் பேச்சி, மீண்டும் சக்தி பெற்றி வெளியே வருகிறது.
அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை திகிலாச் சொல்லி இருக்கிறார்கள்.
வனத்துறை கடை நிலை ஊழியராக வருகிறார் பால சரவணன். எப்போதுமே இயல்பான நடிப்புக்கு பெயர் பெற்றவர். இதிலும் அதே போல ரசிக்கவைக்கிறார். மலையேற வந்திருக்கும் நபர்களை எச்சரிப்பது, அவர்கள் அதை பொருட்படுத்தாத நிலையில் பொங்குவது, மகளிடம் பாசம் காட்டுவது என சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.
நண்பர்கள் குழுவினரான காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ் ஆகிய ஐந்து பேரும் உற்சாக நண்பர்களாக சிறப்பாக நடித்து உள்ளனர். பேச்சிக்கு பயந்து நடுங்கும் காட்சிகளில் நண்பர்கள் குழுவின் நடுக்கம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.
அடர்ந்த காடுகளை நீளமும், உயரமுமாய் காண்பித்து பயமுறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் பார்த்திபன். ராஜேஷ் முருகேசனின் இசை மேலும் திகிலூட்டுகிறது. இக்னேசியஸ் அஸ்வினின் எடிட்டிங் கச்சிதம்.
அடர்ந்த காடு, பாழடைந்தவீடு, மிரட்டும் பேச்சி… என ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை நம்மை திகிலிலேய வைத்திருக்கிறார் இயக்குநர் ராமச்சந்திரன் பி.
அமானுஸ்ய, த்ரில்லர் விரும்பிகளுக்கு அருமையான டிரீட் பேச்சி.