![]()
கார் மேனி செல்வம் _ விமர்சனம்
மனைவி லஷ்மி பிரியா மற்றும் மகனுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் கார் டிரைவர் சமுத்திரக்கனி.
கௌதம் வாசுதேவ் மேனன்_அபிநயா தம்பதி, சமுத்திரகனியை தங்கள் டிரைவராக மட்டும் கருதாமல் குடும்பத்தில் ஒருவராகவே கருதி பழகி வருகின்றனர்.
இருவரும் வெளிநாடு சென்றிருக்கும்போது பொருளாதார நிர்ப்பந்தம் காரணமாக அவர்களுடைய காரை தற்காலிக வாடகை வாகனமாக்கி ஓட்ட தொடங்குகிறார் சமுத்திரக்கனி.
தொடர்ந்து சொந்த கார் வாங்க வேண்டும்…வீட்டு மனை வாங்க வேண்டும் என்றெல்லாம் மனைவி ஆசைப்படவே ஓய்வின்றி அந்தக் காரை ஓட்டிக் கொண்டே இருக்கிறார்.
ஒரு நாள் விபத்தொன்றில் கார் சிக்கிக் கொள்ளவே, அதை ரிப்பேர் செய்ய நிறைய செலவு செய்யும்படி ஆகிறது.
இந்த சூழலில் வெளிநாடு சென்றிருந்த கௌதம் வாசுதேவ் திரும்ப வருகிறார்.
அனுபவத்தால் வாழ்க்கை கற்றுத் தரும் பாடத்தை, கௌதம் வாசுதேவ் சமுத்திரக்கனிக்கு புரிய வைக்கிறார்.
நடுத்தர மக்களின் இ எம் ஐ பிரச்சனைகள், கிரெடிட் கார்டு தொந்தரவுகள் என்று பலவற்றையும் ‘கார் மேனி செல்வம்’ தொட்டுச் சென்றாலும் எல்லாமே மேலோட்டமாகவே சொல்லப்படுகின்றன.
“பணக்காரனாகணும்னா முதல்ல பணக்காரனா வாழ்ந்து பழகணும்…” என்று யாரோ ஒருவர் சொன்ன தவறான வழிகாட்டுதலால் கடன் வாங்கி செலவு செய்து சிக்கலில் மாட்டி மோசமான அனுபவங்களை பெற்று கடைசியில் “இப்படி எல்லாம் யாரும் செய்யாதீர்கள்…” என்று மற்றவர்களுக்கு அறிவுறுத்துவது இந்த கதையின் மிகப்பெரிய பலவீனம்.
சங்கர் கலை இயக்கத்தில் உருவான ‘ட்ரீ ஹவுஸ்’ மற்றும் கடற்கரையில் அமைந்த ஒற்றை வீடு சிறப்பு.
கதையுடனும், காட்சிகளுடனும் பெரிதாக ஒன்ற முடியவில்லை என்றாலும் யுவராஜ் தர்ஷன் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்திருக்கிறது.
டிரைவராக இருக்கும் சமுத்திரக்கனியை “செல்வம் சார்” என்று அழைக்கும் அபிநயா, நவநாகரீக செல்வந்தராக இருந்தாலும் நயமாக நடந்து கொள்ளும் கௌதம் வாசுதேவ் மறக்க முடியாத பாத்திரங்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
வாழ்க்கைக்கு பணம் தேவை என்றாலும் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை..
நிம்மதி என்பது பணத்தில் இல்லை என்ற கருத்தை சொல்ல வந்த இயக்குனர் ராம் சக்ரி அதை வலுவான கதை மூலமும் விறுவிறுப்பான திரைக்கதை வடிவத்திலும் சொல்லி இருந்தால் மிகச் சிறப்பான படமாக உருவாகி இருக்கும். என்ன காரணத்தாலோ அதைச் செய்யத் தவற விட்டார் இயக்குனர்.


