Sunday, September 20

நீளிரா _ விமர்சனம்

Loading

நீளிரா _ விமர்சனம்

நீளிரா என்றால் நீண்ட இரவு எனப் பொருள்.

எண்பதுகளின் இறுதியில் வட இலங்கையின் போர் சூழலில் நடக்கும் கதை இது.

தமிழ் குடும்பம் ஒன்றில் சித்து குமரேசன் திருமணம் நடக்கவிருக்கிறது.

அமைதியை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரில் இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை,  அங்குள்ள போராளிகளை ஒடுக்க முற்படுகிறது. போராளிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக கிடைத்த செய்தியின் அடிப்படையில் அதை தடுக்கும் முயற்சியில் மூன்று அமைதிப்படை குழுக்கள் குறிப்பிட்ட இடத்துக்கு செல்கின்றன.

அதில் ஒரு குழு தவறான பாதையில் சென்று, திருமணம் நடக்கவிருக்கும் தமிழ் குடும்பத்தினர் வீட்டிற்குள் நுழைந்து விடுகின்றனர்.

கல்யாண வீடாக களை கட்டி இருந்த அந்த இல்லம் சிறுக சிறுக இன்னல்களை எதிர்கொள்ள தொடங்குகிறது.

அமைதிப்படை அங்கு நுழைந்து விட்டதை அறிந்த போராளிகள் தமிழ் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு களம் இறங்குகின்றனர்.

இரு தரப்பினரின் துப்பாக்கிக்கு மத்தியில் இருக்கும் தமிழ் குடும்பம் தப்பிப் பிழைத்ததா?

திட்டமிட்டபடி திருமணம் நடந்ததா என்பதுதான்  படத்தின் கதை.

நெஞ்சை நெகிழ வைக்கும் இயல்பான காட்சிகளால் போர் சூழலின் கொடூரத்தை இயக்குனர் சோமிதரன் அற்புதமாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்.

கிட்டத்தட்ட படம் முழுவதும் இரவு காட்சிகளாகவே இருந்தாலும் செல்வரத்தினம் பிரதீபன் ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக அவற்றை பதிவு செய்திருக்கிறது.

தன் பொறுப்பையும் கடமையையும் மனிதாபிமானத்துடன் அணுகும் அதிகாரியாக வரும் இந்திய அமைதிப்படை குழு தலைவர் நவீன் சந்திரா கவனம் ஈர்க்கும் விதத்தில்  நடித்து நெஞ்சில் நிறைகிறார்.

கவிதையை ரசித்ததையும் எப்படி காணாமல் போனால் என்று தெரியாமல் காணாமல் போன கணவரைப் பற்றி கண்ணில் நீர் ததும்ப குடும்பத் தலைவி கபிலா வேணு விவரிக்கும் காட்சி போரின் உக்கிரத்தை உணர வைக்கிறது.

போரை பின்னணியாக கொண்ட கற்பனைக் கதைகளை பல படங்களில் பார்த்துப் பழகிய நமக்கு உண்மைக்கு மிக மிக நெருக்கமாக நிற்கும் நீளிரா  திரைப்படம் நாமே போர் சூழலில் இருந்து விட்டு வந்த உணர்வை தருகிறது.

மதிப்பெண்…

மதிப்பெண்ணை பார்த்துவிட்டு செல்ல வேண்டிய படம் அல்ல.கண்டிப்பாக அனைவரும் தவறவிடாமல் பார்க்க வேண்டிய படம்.