Saturday, July 18

சாருகேசி _ விமர்சனம்

Loading

சாருகேசி: விமர்சனம்

இசையையே தன் உயிராக நினைக்கும் ஒரு ,வித்துவானுக்கு, முதுமையும் மறதி நோயும் (அல்சைமர்) சாட்டையடி கொடுக்கும்போது, அவரும் அவரைச் சுற்றியிருப்பவர்களும் படும் மன உளைச்சல்தான் இந்தத் திரைப்படத்தின் மையக்கரு.

‘சாருகேசி’ என்ற அந்த ராகத்தின் பெயரிலேயே கதையின் மொத்த ஜீவனும் அடங்கியிருக்கிறது.

கர்நாடக இசை உலகில் கொடிகட்டிப் பறக்கும் வித்வானாக ஒய்.ஜி.மகேந்திரன். உலகம் முழுக்க அவருக்குப் பாராட்டு மழை பொழிந்தாலும்,  அன்பான மனைவி கண்ணை இமை காப்பது போல் காத்தாலும் அவரது நெஞ்சில் இரண்டு முட்கள் குத்திக் கொண்டே இருக்கின்றன.

அது, சொந்த மகன் அவர் மீது காட்டும் வெறுப்பும்,  மாட்டுப் பெண்ணாய் வரும் மருமகள் ஏற்படுத்தும் வலியும்தான். இந்த வலியை அவர் தாங்கிக்கொள்வதும், மனைவி மீது பொழியும் காதலும், நோய் முற்றிய பின் குழந்தையாக மாறும் காட்சிகளும் என மனிதர் நடிப்பில் அள்ளுகிறார்.

அவருக்கு ஜோடியாக வரும் சுஹாசினி, எப்போதுமே தேர்ந்த கலைஞர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். கணவர் மீதான அத்தடிப் பாசம், மகனின் அராஜகப் போக்கைத் தாள முடியாமல் ஒரு கட்டத்தில் உண்மையை உடைக்கும் இடம் எனப் பின்னுகிறார்.

ஒய்.ஜி.எம்-மின் தம்பியாக வரும் தலைவாசல் விஜய், துறவியாகத் தோன்றும் சத்யராஜ் எனப் படத்தில் வரும் மற்ற நட்சத்திரங்களும் தங்களுக்குக் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

இது ஒரு இசைக் கலைஞனின் வாழ்க்கை என்பதால், பாடல்களும் பின்னணி இசையும்தான் படத்தின் அஸ்திவாரம். அதைத் தேவா அசாத்தியமாகச் செதுக்கியுள்ளார். கிளாசிக்கல் இசையின் கம்பீரமும் மாறாமல், இன்றைய தலைமுறை ரசிக்கும்படியும் மெட்டுகள் அமைந்திருப்பது சிறப்பு. கதையின் எமோஷனல் காட்சிகளிலும், நாயகனின் தவிப்பிலும் பின்னணி இசை நம் இதயத்தைத் தொடுகிறது.

குறைவான லொகேஷன்கள் என்பதால் நாடகத் தனம் ஆங்காங்கே எட்டிப் பார்த்தாலும் (மூலக்கதை நாடகம்தானே!), ஒளிப்பதிவாளர் சஞ்சய் தன் கேமரா கோணங்களால் அதைச் சரிசெய்யப் போராடியிருக்கிறார்.

ஆக்ஷன் படங்களை இயக்கிப் பழகிய சுரேஷ் கிருஷ்ணா, இதில் முற்றிலும் மாறுபட்டு அமைதியான ஒரு மியூசிகல் டிராமா தந்துள்ளார். மேடையில் சக்கைப்போடு போட்ட நாடகத்தை, வெள்ளித்திரைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுக்கத் தீவிர முயற்சி செய்திருக்கிறார்.

இசை ரசிகர்களுக்கும், குடும்பப் பாசக் கதைகளை விரும்புபவர்களுக்கும் இந்தத் திரைப்படம் ஒரு நல்ல அனுபவம்.