கிளாப் – விமர்சனம்

0

Loading

கிளாப் – விமர்சனம்

படங்களின் எண்ணிக்கையைவிட கதையிலும் தனது பாத்திரப் படைப்பிலும் கவனம் செலுத்தி நடிக்கும் மிகச் சிலரில் ஆதியும் ஒருவர். சற்றே இடைவெளிக்குப் பிறகு ஆதி நாயகனாக களம் இறங்கியிருக்கும் கிளாப் படம் ரசிகர்களுக்கு மன நிறைவைத் தரும் நல்ல படமாக மலர்ந்திருக்கிறது.

சிறிய வயதிலிருந்தே மகன் ஆதியை ஒட்டப் பந்தய வீரனாக்கி சாதனை செய்ய வைக்க வேண்டும் என்று தயார் செய்து வருகிறார் தந்தை பிரகாஷ்ராஜ். வளர்ந்து வாலிபனான ஆதி விபத்து ஒன்றில் தன் தந்தையை பறிகொடுப்பதுடன் ஒரு காலையும் இழக்கிறார். இதைத் தொடர்ந்து விளையாட்டு வாரியத்தில் பணி செய்கிறார்.

400 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் மாநில அளவில் சாதனை நிகழ்த்திய இளம் பெண் பாக்கிய லட்சுமி, தேசிய அளவிலான பந்தயத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் இருப்பது ஆதிக்குத் தெரிய வருகிறது. தான் செய்ய முடியாமல் போன சாதனையை அந்தப் பெண்ணை வைத்து நிறைவேற்ற முடிவு செய்கிறார் ஆதி.

பாக்கிய லட்சுமியின் ஊருக்கு சென்று அவரது வீட்டாரை சரி கட்டி பாக்ய லட்சுமியை அழைத்து வந்து, ஒட்டப் பந்தயத்துக்கு தயார் செய்ய முயல்கிறார். ஆனால் விளையாட்டு வாரியத்தின் தலைவரான நாசர் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார். எந்த பயிற்சியாளரும் பாக்ய லட்சுக்கும் பயற்சி தரக்கூடாது என்று உத்தரவிட்டு இடையூறு செய்யவே ஆதியே பயிற்சி தர ஆரம்பிக்கிறார்.இறுதியில் ஆதி தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா… அவரது கனவு நிறைவேறியதா என்பதே கிளாப்.

எல்லாத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல் விளையாட்டுத் துறையையும் விட்டு வைக்க வில்லை என்பதை மிக அழகாகவும், ஆணித்தரமாகவும் படமாக்கியிருக்கும் இயக்குனர் பிரித்வி ஆதித்யாவிற்கு பாராட்டுக்கள்.

பிரவீண் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஒட்டப் பந்தயத்தின்போது நாமும் ஒடுவதுபோலவே அமைந்திருப்பது வெகு சிறப்பு.
படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறாராம். பாடலும் பின்னணி இசையும் அப்படித் தெரியவில்லையே…..
ஒற்றைக் காலுடன் மொத்தப் படத்தையும் தாங்கிப் பிடித்து வெகு சிறப்பாக நடித்திருக்கிறார் ஆதி. குறிப்பாக கால் வலியால் துடிக்கும்போது, அந்த வேதனையை பார்வையாளர்களுக்கும் கடத்துகிறார். வெல்டன் ஆதி.
ஆதியின் மனைவியாக வரும் அகான்ஷா சிங் பாத்திரத்தை உணர்ந்து முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிக வசனங்கள் இல்லாபோதும், தன் முக பாவங்களாலேயே பேசியிருக்கிறார்.

பாக்கிய லட்சுமியாக வரும் க்ரிஷா க்ரூப் முகத்தில் சோகம் இழையோட, வெற்றிக்கான வெறி கண்களில் மின்ன, சிறப்பாக நடித்திருக்கிறார்.

காதலித்த அகான்ஷா சிங்கை மணந்த ஆதி அவருடன் சுத்தமாக பேச்சை நிறுத்தியதற்கு வலுவான காரணம் எதுவும் படத்தில் சொல்லப்படாதது ஒரு குறைதான்.

படத்தின் இறுதிக்காட்சியில் மனைவியை பெயர் சொல்லி அழைத்த ஆதி ஒன்றும் பேசாமல் அழ ஆரம்பிப்பதும் மனைவியும் அழ ஆரம்பிப்பதும் சோகமயமான கவிதை. எவ்வளவு பிரமாதமாக வசனங்கள் எழுதியிருந்தாலும், அழுத்தம் தந்திருக்காத இந்தக் காட்சி வசனமே இல்லாமல் அற்புதமாக அமைந்திருக்கிறது.

நம்பிக்கை நாற்றுகளை விதைக்கும் கிளாப் போன்ற நல்ல படங்களை இரு கரம் தட்டி வரவேற்போம்.

மதிப்பெண் 4 /5

 

Share.

Comments are closed.