Tuesday, December 10

காலேஜ் குமார் – விமர்சனம்

Loading

அரிவாள், வெட்டு, குத்து , துப்பாக்கி என்று வன்முறை அதிகமாகிவிட்ட தமிழ்ப்படங்களில், குடும்பப் பாங்கான திரைப்படங்கள் என்பது அரிதாகிப்போவதில் ஆச்சரியம் இல்லைதான். பாண்டியராஜ் போன்ற இயக்குநர்கள் புண்ணியத்தில் அவ்வப்போது குடும்பக் கதையம்சங்கள் கொண்ட படங்கள் காணக்கிடைக்கின்றன.

குடும்பத்துடன் அனைவரும் பார்க்கக்கூடிய ஒரு படத்தைத் தந்ததற்காகவே இயக்குநர் ஹரி சந்தோஷுக்கு முதலில் ஒரு பாராட்டுப் பத்திரத்தை வாசித்து விடலாம். 2017ஆம் ஆண்டு கன்னடத்தில் வந்த பெரும் வெற்றி பெற்ற காலேஜ் குமார் படத்தை தமிழில் இயக்கி தமிழ்ப்படவுலகுக்கு வந்திருக்கிறார் ஹரி சந்தோஷ்.
மகனை படி படி எந்த நேரமும் தொந்தரவு செய்து, எப்போதும் அவன் முதல் மதிப்பெண்தான் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கும் தந்தை பிரபு. மகனால் ஏன் சரியாகப் படிக்க முடியவில்லை என்றுகூட யோசிக்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மகன் ராகுல் விஜய் நீ வேண்டுமானால் காலஜ்போய் படதித்துப்பார்… படிப்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்று உனக்குப் புரியும் என்று கோபமாகச் சொல்வார். இருவரும் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக்கொள்ள, பிரபு படிப்பதற்கு கல்லூரிக்குச் செல்ல, மகன் ராகுல் விஜய் உழைத்துச் சம்பாதிக்கப் புறப்பட்டு விடுகிறார்.
சவால் விடுத்துக் கொண்ட இந்த இருவரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் காலைஜ் குமார் படத்தின் கதை.
மகன் படிப்பில் அதீத அக்கறை காட்டும்வேடத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறார் பிரபு. பிற்பகுதியில் கல்லூரியில் படிக்கச் செல்லுவதுதான் காதில் பூ சுற்றும் அல்ல அல்ல காதில் பூந்தோட்டத்தையே சுற்றும்காட்சியமைப்புகளாக அமைந்திருக்கின்றன. காரணம் பிரபுவின் ஆகிருதி அப்படி. ஆயினும் மெலிதான நகைச்சுவை கலந்த அந்த வேடத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார் பிரபு.பிரபுவின் பாந்தமான மனைவியாக மதுபாலா மனதில் நிற்கிறார். அவருக்கென உருவாக்கப்பட்ட பாத்திரம்போல், அப்படியே பொருந்திப்போகிறார்.
ராகுல் விஜய் காதலியாக பிரியா வட்லமணி நடித்திருக்கிறார். ராகுலும் பிரியாவும்தான் படத்தின் நாயகன் நாயகி என்றாலும் படத்தைத் தாங்கிப்பிடிப்பது என்னவோ பிரபுவும் மதுபாலாவும்தான். கல்லூரி குமார் படத்தின் நாயகன் நாயகி இவர்கள்தான் என்று சொன்னால்கூட தவறில்லை.
கல்லூரி பேராசிரியராக வரும் மனோபாலா நகைச்சுவை என்ற பெயரில் அடிக்கும் கூத்துகள் எரிச்சலூட்டுகின்றன. இன்னும் எத்தனை படத்தில்தான் இவரை இப்படி பார்த்துக்கொண்டிருப்பது…
கல்லூரி முதல்வர் வேடத்தில் நாசர் நடித்திருக்கிறார். அவருக்கு சற்றும் நடிக்கும் ஸ்கோப் இல்லாத பாத்திரம்.குருபிரசாத் ராயின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. கல்லூரி வகுப்பறை காட்சிகளிலும், கேன்டீன் காட்சிகளிலும் ஏகப்பட்ட பாத்திரங்கள் இருந்தாலும் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அழகாகப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

குதூப் ஈ கிருபா படத்துக்கு இசையமைத்திருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.
கல்வியை வலுக்கட்டாயமாக மகன் மீது திணிக்க முயலும் தந்தையையும், வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி முக்கியமல்ல என்று நிரூபிக்க வெற்றிகரமாக கேன்டீனை நடத்தும் மகனையும் பிரதானப்படுத்தியிருக்கும் இப்படக்கதை படமாக்க தேர்வு செய்த இயக்குநர், திரைக்கதையில் இன்னும் கூடுதலாக மெனக்கெட்டு உருவாக்கியிருந்தால் மிகச்சிறந்த படமாக மிளிர்ந்திருக்கும்.

ஆயினும் குடும்பத்துடன் பார்ககூடிய நல்லதொரு படத்தைத் தந்ததற்காகவே காலேஜ் குமார் படக்குழுவை தாராளமாகப் பாராட்டலாம்.