![]()

தெய்வ மச்சான் – திரைப்பட விமர்சனம்
விமல், பாண்டியராஜன், அனிதா சம்பத், பால சரவணன், ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும் தெய்வ மச்சான் படத்தை கலகலப்பான நகைச்சுவை விருந்து என்று ஒரே வரியில் சுருக்கமாக விமர்சித்து விடலாம்.
பாண்டியராஜனுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். மூத்த மகன் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் தந்தையுடனே வசிக்கிறார். இரண்டாவது மகன்தான் விமல். அடிக்கடி விமல் கனவில் வெள்ளை குதிரையுடன் வரும் வேல.ராமமூர்த்தி சொல்லும் ஜோதிடம் அப்படியே பலித்துவிடுகிறது.
விமலின் தங்கை அனிதா சம்பத்துக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. ஜமீந்தார் என்ற பந்தாவுடன் அனிதா சம்பத்தை பெண் பார்க்க வருபவர் வயது அதிகமாக இருப்பதால், அந்த சம்பந்தத்தை நிராகரிக்கிறார் விமல்.
இதனால் ஆத்திரமடைந்த ஜமீந்தார் அனிதா சம்பத்துக்கு திருமணம் நடக்காமல் தடுக்க முயற்சிப்பதுடன், விமலையும் பழி வாங்கத் துடிக்கிறார்.
ஆனால் இவற்றை மீறி அனிதா சம்பத்துக்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்தேறுகிறது.
ஆனால் இப்போது பிரச்சனை வேறு ரூபத்தில் வருகிறது.
அதாவது அடிக்கடி விமல் கனவில் வரும் வேல.ராமமூர்த்தி இப்போது கனவில் வந்து “உன் தங்கையின் கனவன்….மச்சான்….கல்யாணமான இரண்டு நாட்களில் இறந்து விடுவான்…” என்று கூறுகிறார்.
கனவில் வந்து வேலராமமூர்த்தி சொன்னது எல்லாம் ஏற்கெனவே அப்படியே நடந்த காரணத்தால், தன் தங்கையின் கணவனை காப்பாற்ற விமல் எப்படியெல்லாம் போராடுகிறார் என்பதுதான் தெய்வமச்சான் படத்தின் கதை.

வழக்கம்போல் கனவு அப்படியே நடந்ததா… அல்லது விமல் தங்கையின் கணவரை காப்பாற்றினாரா என்பது படத்தின் பிற்பகுதி.
விமல் தன் தங்கையின் கணவர் உயிரைக் காப்பாற்றப் போராடுவது எல்லாம் அட்டகாசமான நகைச்சுவை.
குறிப்பாக கோவிலுக்கு போகும்போது ஒருவர் சிறுநீர் கழிக்க ஒடும் பஸ்ஸிலிருந்தே இறங்க முயற்சிக்க “இருங்கள்… பஸ் நின்ற பிறகு இறங்குங்கள்… ” என விமல் சொல்ல அதற்கு அவர் “நான் ஒன்னுக்குப் போயிட்டு அதோ அந்த ஆலமரத்தடியில் நிற்கிறேன். பஸ் வரும்போது ஏறிக்கொள்கிறேன்…” என்று பஸ் மிக மெதுவாகப் போவதை கிண்டல் செய்வது வேற லெவல் நகைச்சுவை.
அதே போல் தங்கை திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று சாமி படத்தின் முன் விமல் வேண்டிக்கொள்ளும்போதெல்லாம், குறும்புத்தனம் செய்யும் சிறுவன் அபச குணமாகத் தவறி விழுந்து அய்யோ என்று கத்துவதும், திருமணம் தடைபடுவதும், ஒரு கட்டத்தில் இதைத் தவிர்க்க சிறுவனையை விமல் கட்டுப்போடுவதெல்லாம் கலகலப்பான காட்சிகள்.
படத்தையே கலகலப்பாக கொண்டு செல்வது பால சரவணன் என்றால் மிகையாகாது.
மனிதர் வரும் காட்சிகள் எல்லாம் சிரிப்புக்கு உத்தரவாதம் உண்டு.
பெரிய ஜமீன் வேடத்தில் வில்லத்தனம் காட்டும் ஆடுகளம் நரேனும், விமலின் அத்தை வேடத்தில் வரும் தீபா சங்கரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தே கதையை உருவாக்கியிருக்கும் இயக்குநர் மார்ட்டின் நிரமல் குமார், அதற்கு ஏற்ற வகையில் காட்சிகளை ரசிக்கும் விதத்தில் அமைத்திருக்கிறார்.
குறை சொல்ல முடியாத அளவுக்கு காட்சிகளை சிறப்பாகவே படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கேமில் ஜே அலெக்ஸ்.
அஜீஸின் பின்னணி இசை சுமார் ரகம்தான்.
சற்றும் போராடிக்காத வண்ணம் காட்சிகளை தொகுத்திருக்கிறார் படதொகுப்பாளர் இளையராஜா.
கவலைகளை மறந்து மனம் விட்டு சிரித்து மகிழ கலகலப்பான தெய்வ மச்சான் படத்தை தாராளமாகப் பார்த்து மகிழலாம்.
மதிப்பெண் 3/ 5
