டெவில் _ விமர்சனம்
சவரக்கத்தி படத்தை இயக்கி கவனிக்க வைத்த ஆதித்யா இயக்கியுள்ள இரண்டாவது படம் டெவில்.
மிஷ்கின் முதல்முறையாக இசையமைத்துள்ளார். இளையராஜாவை மானசீக குருவாக வைத்துக் கொண்டு இசையை கடந்த சில ஆண்டுகளாக கற்று வந்த மிஷ்கின் இந்த டெவில் படத்தில் இளையராஜா பாணியிலேயே இசையமைத்திருக்கிறார். ஆங்கில படங்கள் போல 2 மணி நேரத்துக்கும் குறைவாக படம் இருப்பதால் விறுவிறுப்பாக சென்று விடுகிறது. ஹாரர் ஸ்டைலில் உருவாகி உள்ளது.
வழக்கறிஞரான விதார்த் – பூர்ணாவை திருமணம் நடக்கிறது. ஆனால் விதார்த், தன் அலுவலகத்தில் பணியாற்றும் சுபஸ்ரீயுடன் தொடர்பில் இருக்கிறார். இது அவரது மனைவி பூர்ணிமாவுக்கு தெரிந்துவிடுகிறது.
இந்த நிலையில் பூர்ணிமாவுக்கு திரிகுன் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. ஒரு நாள் இரவு, திரிகுன் பூர்ணிமாவின் வீட்டுக்கு வர… வீட்டில் விதார்த் இருக்க.. இருவருக்கும் கைகலப்பு ஏற்படுகிறது.
அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
வழக்கம்போல் விதார்த் இயல்பாக நடித்து மனதில் பதிகிறார். மனைவியைவிட காதலிக்கு முக்கியத்துவம் தருவது.. காதலியிடம் பயந்து நடப்பது.. இந்த விவகாரம் மனைவிக்குத் தெரிந்த பிறகு அதிர்ச்சியாவது… இறுதியில் மனம் திருந்தி மனைவியிடம் கதறி அழுவது என சிறப்பாக நடித்து உள்ளார்.
பூர்ணாவும் தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்து உள்ளார். கணவன் மீது வைக்கும் காதல், அவனது போக்கு அறிந்து அதிர்வது, புதிய இளைஞனுடன் பழகுவதும்.. அதைத் தவிர்க்க நினைத்து விலகுவதும் அருமையான நடிப்பு.
திரிகுன் மற்றும் சுபஸ்ரீ ஆகியோரின் நடிப்பும் அருமை.
முதன் முதலாக இந்தப் படத்துக்கு இசை அமைத்து இருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். ஒரே வரியில் சொன்னால்.. படத்தின் இன்னொரு கதாபாத்திரமாகவே இசையும் வருகிறது. சிறப்பு.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவை படத்துக்கு பலம்.
நான்கு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து, சிறப்பான படத்தை அளித்து உள்ளார் இயக்குநர் ஆதித்யா.
நம்ப முடியாத பேய், க்ரைம் கதைகளைப்போல இல்லாமல், மனித மனதிற்குள் இருக்கும் பேய்களை வெளிப்படுத்தி இருக்கிறது டெவில் படம்.