நாயகிக்குத் திடீரென ஒரு இமெயில் வருகிறது.
அதில் குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்து விளையாடினால் பரிசு காத்திருப்பதாக தகவல் வருகிறது.
அதே போல் நாயகி செய்ய… கொரியரில் லம்ப்பாக பணம் வருகிறது.
பணத்துக்கு ஆசைப்படும் நாயகி அந்த விளையாட்டுக்குள் முழுமையாக இறங்க… அவள் மீது கொலைப்பழி விழுகிறது.
அவளை இப்படி சிக்கலில் மாட்டிவிட்டவர்கள் யார்.. அதிலிருந்து நாயகி தப்பித்தாளா… என்பதே கதை.
முருகா படத்தில் நடித்த அசோக் குமார் நாயகனாக நடித்து உள்ளார். பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி ஹீரோயின்.இவருக்குத்தான் படத்தில் முக்கியத்துவம்.
அதற்கேற்ற நடிப்பை அளித்துள்ளார். வாடகை செலுத்த முடியாமல் தவிப்பது, அலுவலகத்தில் அவமானப்படுவது போன்ற காட்சிகளில் பரிதாபப்பட வைக்கிறார்.
அதே போல சிக்கலில் இருந்து மீள வேண்டும் என்கிற நிலையில் புலியாக மாறி அதிரடி காட்டுகிறார். சண்டைக் காட்சிகளிலும் மிரட்டுகிறார்.
ஆதவ் பாலாஜி, மனோபாலா, லொள்ளு சபா மனோகர் ஆகியோர் காமெடிக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். கொஞ்சம் சிரிக்க வைக்க முயல்கின்றனர்.
அவினாஷ் கவாஸ்கர் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். ஜூபின் பின்னணி இசை படத்துக்கு பலம். க்ரைம் படத்துக்குத் தேவையான அதிரடி இசையை வழங்கி உள்ளார்.
ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் க்ரைம் கலந்து சுவாரஸ்யமாக அளித்துள்ளார் இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன். படத்தின் தயாரிப்பாளரும் இவரே.
எப்போதும் செல்போனில் மூழ்கிக்கிடக்கும் இளைய சமுதாயத்தினர் அவசியம் பார்க்க வேண்டிய படம்.