எதற்கும் துணிந்தவன் – விமர்சனம்

0

 335 total views,  1 views today

எதற்கும் துணிந்தவன் – விமர்சனம்

படத்தின் துவக்கத்திலேயே காவல் அதிகாரி ஒருவர், நல்லாசிரியர் வருது பெற்ற ஒருவர் என ஐந்து பேரை சூர்யா கொலை செய்வதாக காட்சி அமைக்கப்பட்டிருப்பதால் நிமிர்ந்து உட்கார்ந்து ஒருவிதமான எதிர்பார்ப்புடன் படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இந்த எதிர்பார்ப்பை ஏமாற்றத்துக்குள்ளாக்காமல் விறுவிறுப்பான ஒரு குடும்பச் சித்திரத்தை தந்ததற்காகவே இயக்குநர் பாண்டிராஜைப் பாராட்ட வேண்டும்.

தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் உப்பு புளி காரம் என சகல மசாலா அம்சங்களையும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பச் சித்திரமாக எதற்கும் துணிந்தவன் என்ற பெயரில் சூர்யாவின் துணையோடு கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

பெண் கொடுத்து பெண் எடுத்து ஒற்றுமையாக வாழ்ந்த வடநாடு, தென்னாடு என்ற இரு ஊர்காரர்களுக்கும் ஒரு பெண் தற்கொலை காரணமாக பிரச்னை ஏற்படுகிறது. வக்கீலான சூர்யா தவறு செய்த நபருக்கு சட்டப்படி தண்டனை வாங்கித் தருகிறார். இதனால் இரு ஊர்க்காரர்களுக்கும் பகை ஏற்படுகிறது.

தென்னாட்டைச் சேர்ந்த சூர்யா காதலிக்கும் ப்ரியங்கா மோகன் வடநாட்டைச் சேர்ந்தவர். இருவர் இணைவதற்கும் ஊர்ப்பகை தடையாக இருக்கையில், படத்தின் கதையே தடம் மாறுகிறது.

வடநாட்டைச் சேர்ந்த மந்திரி மகன் தன் ஆட்கள் மூலம் இளம் பெண்களை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்வதுடன் அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டுகிறான். இதனால் சில தற்கொலைகளும் நடக்கின்றன.
கிராமத்து பெண்களை வாடா போடா என்று செல்லமாகப் பேசிப் பழகி அவர்களிடம் பாசமாக இருக்கும் சூர்யாவுக்கு இந்த விஷயம் தெரிய வர வெகுண்டெழுந்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த முயல்கிறார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடையவே வக்கீலாக இருக்கும் தானே ஜட்ஜாக மாறி குற்றவாளிகளுக்கு தண்டனை தர முடிவு செய்கிறார்.
அதிகார வர்க்கத்தை அவர் எவ்வாறு எதிர்கொண்டார்….குற்றவாளிகளுக்கு எந்த விதமான தண்டனை வழங்கினார் என்பதுதான் எதற்கும் துணிந்தவன் படத்தின் கதை.

படத்தின் துவக்கத்தில் செல்பேசி ஒலிக்க, “இது இருந்தாலும் தொல்லை இல்லாவிட்டாலும் தொல்லை …” என்று சலித்துக்கொண்டே வந்து போனை எடுக்கும் சரண்யாவிடம்,  “உங்கள் மகன் இரண்டு கொலை செய்துவிட்டான்…”  என்ற தகவல் சொல்லப்பட “…என்னங்க நம்ம மகன் இரண்டு கொலை பண்ணிட்டானாம்….” என சரண்யா, தன் கணவர் சத்யராஜிடம் சொல்ல, அதற்கு அவர் சாவகசமாக  “இரண்டு கொலை என பொய் சொல்கிறார்கள்….ஐந்து கொலை செய்திருக்கிறான்…” என சொல்கிறார்….
படம் முழுவதும் சத்தியராஜ் மற்றும் சரண்யா உரையாடல் இப்படித்தான் நக்கலும் நையாண்டித்தனமாகவும் அமைந்திருக்கிறது.
இதேபோல் நாயகி ப்ரியங்கா மோகன் தாய் தந்தையாக நடித்திருக்கும் இளவரசு மற்றும் தேவதர்ஷிணி உரையாடல்களும் நகைச்சுவை ததும்ப ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன. சூரி, குக் வித் கோமாளி புகழ், ராமர் ஆகியோர் இருந்தும் ரசிக்கும்படியான நகைச்சுவைக் காட்சிகள் இல்லாத குறையை இந்த இரண்டு ஜோடிகள்தான் தீர்த்து வைக்கின்றன.

அழகுப் பதுமையாக மட்டும் வந்து செல்லாமல், நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி முத்திரை பதிக்கிறார் பிரியங்கா மோகன். ஆரம்பத்தில் குறும்புத்தனம் மிளிர சூர்யாவை காதலிப்பதாகட்டும்,’  … பெண்களை நிர்வாணப்படம் எடுத்து வெளியிடுபவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்…” என்று பின் பகுதியில் உணர்ச்சிகரமாக வசனம் பேசுவதிலாகட்டும்…..சும்மா சொல்லக்கூடாது….பிரமாதப் படுத்தியிருக்கிறார் பிரியங்கா மோகன்.

சண்டைக் காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் ரத்தனவேலுவின் உழைப்பு மிளிர்கிறது.

டி.இமான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்தான் என்றாலும் டூயட் பாடல் படமாக்கப்பட்ட விதத்தில் கவர்கிறது.

ரூபனின் படத்தொகுப்பு படத்தில் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத வகையில் விறுவிறுப்பாக அமைந்திருக்கிறது.

வாழும் காலமும் வசிக்கும் சூழலும் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் பெருகிக்கொண்டிருப்பதையை காட்டுகையில் சரியான சமயத்தில் வந்திருக்கும் ஒரு சரியான படம் என்றுதான் எதற்கும் துணிந்தவன் படத்தை சொல்ல வேண்டும்.

காவலன் செயலியை பெண்கள் தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும் என்பதில் தொடங்கி, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண் மன தைரியத்துடன் எப்படி அதை எதிர்கொள்ள வேண்டும் என்பதுவரை அறிவுரை பாணியில் இல்லாமல் ஒரு பொழுது போக்குப் படத்தில் இயல்பாகக் கொடுத்த எதற்கும் துணிந்தவன் படக்குழுவை மனம் நிறைந்து பாராட்டலாம்.

குடும்பத்துடன் பார்த்து மகிழ வேண்டிய படம்.

மதிப்பெண் 4/ 5

Share.

Comments are closed.