Monday, December 8

Gaami (Telugu) Review

Loading

Gaami (Telugu) Review

அகோரியாக வாழும் ஷங்கருக்கு வித்தியாசமான ஒரு ஃபோபியா.. அதாவது மனிதர்கள் யாரையாவது அவர் தொட்டுவிட்டால், அதிர்ச்சிக்கு ஆளாகி விடுவார். இந்த நோயை குணப்படுத்த இமய மலையில் 36 வருடங்களுக்கு ஒருமுறை முளைக்கும் அதிசய காளானை பறிக்கச் செல்கிறார்.
இன்னொரு புறம், கிராமம் ஒன்றில், தேவதாசியாக இருந்த துர்காவின் (அபிநயா) மகளையும் தேவதாசியாக்க தீர்மானிக்கிறார்கள். அந்த சிறுமி, கிராமத்தில் இருந்து தப்பி ஓடுகிறாள்.

மற்றொரு பக்கம், விநோதமான ஆராய்ச்சிக்காக, கொடூர மருத்துவமனையில் அடைக்கப்பட்டு சித்திரவைதக்கு ஆளாகிறான் ஒரு சிறுவன். அவன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயல்கிறான்.மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் இந்த மூன்று கதைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?

இந்தக் கதைகள் ஒன்று சேரும் புள்ளி என்ன என்பதை சுவைபட விவரிப்பதே  இத்திரைப்படம்.

அகோரி ஷங்கராக விஸ்வக் சென் நடித்து உள்ளார். தனக்கான பிரச்சினையை எண்ணி எப்போதும் இறுக்கமாகவே உள்ளார். அதே நேரம், தனது உடல் பிரச்சினையை போக்க தீவிரமாக இருக்கிறார். சாகச காட்சிகளிலும் அசத்தி இருக்கிறார்.

அவருடன் சக பயணியாக இணைந்து இமயம் செல்கிறார் சாந்தினி செளத்ரி. அகோரியிடம் நட்பாக முயல்வது.. அவர் ஒதுக்கவே வருந்துவது என நிறைவான நடிப்பை அளித்து இருக்கிறார்.

பரிதாபத்துக்குரிய தேவதாசியாக வந்து அனுதாபங்களை அள்ளிச் செல்கிறார் அபிநயா.
சோதனை எலிபோல் சிக்குண்டிருக்கும் மருத்துவச் சிறையிலிருந்து தப்பிக்கத் தவிக்கும் இளைஞராக நடித்து உள்ளார் முகமது சமாத். தன் வேதனை, வலியை எப்போதும் முகத்தில் தேக்கி, நம்மை சோகத்துக்கு உள்ளாக்குகிறார்.
இப்படி அனைவருமே தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்து உள்ளனர்.

பிரமிக்க வைக்கும் அளவில் இமயமலை காட்சிகளில் முத்திரை பதித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஸ்வந்த் ரெட்டி செல்லுமலா. பனி மலையின் கொடுங் குளிரை நாம் உணர முடிகிறது.

சி.ஜி. காட்சிகளும் ஒளிப்பதிவாளருடன் கை கோர்த்து வேறு லெவல் திரை அனுபவத்தைத் தருகிறது.

நரேஷ் குமரனின் பின்னணி இசை, சிறப்பு. 

அதே நேரம் லாஜிக் மீறல்களும் இல்லாமல் இல்லை.
கிளைமாக்ஸ் நெருங்கும் வரை கதையின் போக்கு மிக மெதுவாகவே இருக்கிறது.
ஆனால கடைசி பத்து நிமிடங்கள் இந்தக் குறையைப் போக்கிவிடுகின்றன.
ஆம்.. கிளைமைக்ஸூக்காகத்தான் இந்த மெதுவான நகர்வு என்பது புலப்பட்டதும் கைதட்ட தோன்றுகிறது.

துவக்க காட்சியில் மடியில் படுத்திருக்கும் மகளின் தலை முடியை தாயார் கோதி விடுவதைப்போல் முடிவுக் காட்சியையும் இயக்குனர் வித்யாதர் காகிடா அமைத்திருப்பது வெகுவாக ரசிக்க வைக்கிறது.