![]()
கட்டா குஸ்தி 2: விமர்சனம்
2022-ல் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த ‘கட்டா குஸ்தி’ டீம், அதே எனர்ஜியுடன் மீண்டும் களம் கண்டிருக்கிறது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாகப் பிரம்மாண்டமாகப் பின்னப்பட்டிருக்கிறது ‘கட்டா குஸ்தி 2’.
முந்தைய பாகத்தில் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி ஜோடியின் ஈகோ மோதல்களையும், மல்யுத்த சண்டைகளையும் பார்த்தோம். இதில் களமும், கதையும் புதிய பரிணாமம் எடுத்திருக்கிறது.
கதைப்படி, தம்பதிக்கு இப்போது ஒரு செல்லக் குழந்தை இருக்கிறது. ஐஸ்வர்யாவுக்கு ரயில்வே வேலை கிடைக்க, அதே சமயம் மல்யுத்தத்திலும் அசத்துகிறார்.
மனைவியின் வளர்ச்சிக்குத் தூணாக நின்று, வீட்டைப் பார்த்துக் கொள்ளும் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ விஷ்ணு விஷால், கச்சிதமான நடிப்பு!
ஐஸ்வர்யாவை விளையாட்டில் இருந்து அப்புறப்படுத்த நடக்கும் சதிவலைகள்தான் படத்தின் கிளைமாக்ஸ் வரை நகரும் சுவாரஸ்யக் களம்.
விஷ்ணு விஷால் நடிப்பில் செம்ம கலகலப்பு! மனைவியின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் பாசமான கணவனாக ஸ்கோர் செய்கிறார்.
சமையல் அறையிலும், குழந்தையைத் தூக்கிக் கொஞ்சும் இடத்திலும் இவரது காமெடி டைமிங் தியேட்டரை அதிர வைக்கிறது.
ஐஸ்வர்யா லட்சுமி, தன் கோபத்தையும் அன்பையும் முகபாவனைகளிலேயே கடத்தி விடுகிறார். மல்யுத்த வீரங்கனையாகவும், குடும்பத் தலைவியாகவும் மிளிர்கிறார்.
கருணாஸ் மாமா பாத்திரத்தில் மீண்டும் ஒரு கலக்கல்! பஞ்சாயத்து தலைவியான தன் மனைவி ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் சரளமாக உரையாட, அதைத் திகைப்புடன் பார்க்கும் கருணாஸின் ரியாக்ஷன் ‘அட்ராசக்கை’ ரகம்.
முனீஷ்காந் தன் அண்ணன் மகளின் மீது கொண்ட அளவுக்கதிகமான பாசமே வில்லத்தனமான வேலைகளை செய்ய வைக்கிறது. அதை கச்சிதமான மீட்டரில் எதார்த்தமாக செய்து இருக்கிறார் .
காளி வெங்கட் தன் பங்கிற்குச் சிரிக்க வைக்கிறார்.
படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபுவின் திடீர் வரவு சர்ப்ரைஸ் பேக்கேஜ்!
நீதிபதியாக வரும் ரம்யா, தன் கணவனுக்குக் கொடுக்கும் தண்டனை பஞ்ச் செம்ம!
யோகி பாபு தனது டிரேட்மார்க் நகைச்சுவையால் கைதட்டல் பெறுகிறார்.
ஷான் ரோல்டனின் இசை படத்திற்குப் பெரிய பலம். ‘சம்பவக்காரி’ பாடல் முதல் பின்னணி இசை வரை அதிரடி.
கே.எம். பாஸ்கரனின் கேமரா, கிராமத்து அழகையும் மல்யுத்த மோதல்களையும் கண் முன்னே கொண்டு வருகிறது.
இயக்குநர் செல்ல அய்யாவு, முதல் பாகத்தின் வெற்றி ஃபார்முலாவை மட்டும் கையிலெடுக்காமல், புதிய சிக்கல்களையும் கதாபாத்திரங்களுக்குச் சுவாரஸ்யமான பரிமாணங்களையும் தந்து மெருகேற்றியிருக்கிறார்.
காமெடி, எமோஷன், ஆக்ஷன் மூன்றையும் சரிவிகிதத்தில் கலந்து ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக மாற்றியிருக்கிறார் இயக்குனர்.
சுருக்கமாகச் சொன்னால், முதல் பாகத்தின் அதே விறுவிறுப்புடனும் சுவாரஸ்யத்துடனும், ரசிகர்களைச் சீட் நுனியில் உட்கார வைக்கும் ஒரு தரமான வணிகத் திரைப்படம் இது.
குடும்பத்தோடு சென்று கொண்டாட்டமாகப் பார்க்கத் தாராளமான தேர்வு!
நிச்சயமாக மிஸ் பண்ணக் கூடாது!
மதிப்பெண் 4.5/5


