![]()

கட்ஸ்_ விமர்சனம்
தந்தை மகன் என இரட்டை வேடமேற்று நடித்திருப்பதுடன், படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார் ரங்கராஜ்.
பிரசவத்துக்காக தன் மனைவி சுருதி நாராயணனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும் போது ஒரு கும்பலால் கொலை செய்யப்படுகிறார் ரங்கராஜ்.
பிறக்கும்போதே தந்தையை இழந்த மகன் ரங்கராஜ், சிறுவயதிலேயே தாயையும் இழந்து விடுகிறார். தாயின் ஆசைப்படியே போலீஸ் அதிகாரியாகவும் ஆகிவிடுகிறார்.
மனைவி நான்சியுடன் மகிழ்ச்சிகரமாக வாழும் ரங்கராஜ் ஒரு திருநங்கை கொலை வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
இந்த நிலையில் ரங்கராஜ் மனைவி நான்சி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.
மனைவியை பறி கொடுத்துவிட்டு, வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருக்கும் ரங்கராஜுக்கு கான்ஸ்டபிள் டெல்லி கணேஷ் மிகவும் ஆறுதலாக இருக்கிறார்.
இந்த சூழலில் தன் தந்தை ரங்கராஜையும் மனைவியையும் கொன்றது யார் என்பது இன்ஸ்பெக்டர் ரங்கராஜுக்கு தெரிய வருகிறது.
பிறகு என்ன நடந்தது என்பது படத்தின் பிற்பகுதி.
தந்தை மகன் என்று இரண்டு வேடங்களை ஏற்றாலும் அவற்றை குறைவின்றி செய்திருக்கிறார் புதுமுகம் ரங்கராஜ்.
கிராமத்தில் வசிக்கும் தந்தை ரங்கராஜ் கர்ப்பிணி மனைவியை காப்பாற்ற முயற்சிக்கும் துவக்க காட்சிகளிலேயே அவரது நடிப்பு நம் கவனத்தை ஈர்க்கிறது.
நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் வரும் மகன் ரங்கராஜ் கம்பீர தோற்றத்தாலும், கச்சிதமான உடல் மொழியாலும் ஏற்ற வேடத்துக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
அப்பா ரங்கராஜுக்கு ஜோடியாக வரும் ஸ்ருதி நாராயணன், இன்ஸ்பெக்டர் ரங்கராஜுக்கு மனைவியாக வரும் நான்சி மற்றும் சாய் தீனா, பிர்லா போஸ் ஆகியோரும் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை நிறைவாகவே செய்திருக்கின்றனர்.
ஜோஸ் பிராங்கிளின் இசையமைப்பு மற்றும் மனோஜின் ஒளிப்பதிவு இரண்டும் சுமார் ரகம் தான்.
அர்ஜுன் தேவ் யார் என்று கேட்டு ஒருவரை இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் அடித்து உதைக்கிறார். மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளியாக காட்டப்படும் அர்ஜுன் தேவ் பெயரைக் கூட தெரியாமல் இன்ஸ்பெக்டர் இருப்பார்?
கடையில் தொங்கும் செய்தித்தாள் போஸ்டரில் உள்ள அர்ஜுன் தேவின் தந்தை படத்தை பார்த்துவிட்டு இவரது மகனைத்தான் நான் கொன்றேன் என சாய் தீனாவிடம் ரங்கராஜ் கூறுகிறார். அர்ஜுன் தேவ் பற்றிய தெரியாதவருக்கு அவரது அப்பாவை எப்படி தெரியும்.
இது போன்ற ஒரு சில குறைகளை இயக்குனர் ரங்கராஜ் தவிர்த்து இருக்கலாம்.

