Tuesday, September 22

திரைப்பட விமர்சனம் ஜே பேபி

Loading

திரைப்பட விமர்சனம் ஜே பேபி

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் சுரேஷ் மாரி இயக்கி உள்ள படம், ஜெ.பேபி.

ஊர்வசி கதை நாயகியாக நடிக்க, தினேஷ், மாறன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

ஊர்வசிக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள். அனைவருக்கும் திருமணம் செய்துவிட்டு ஒவ்வொருவர் வீட்டிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார்.

மனச்சிதைவுக்கு ஆளான ஊர்வசி அக்கம்பக்கத்தினர் வீட்டை பூட்டி விடுவது, போலீஸ் உள்ளிட்ட பலரிடம் எக்குதப்பாக பேசி வம்பை விலை கொடுத்து வாங்குவது என தொடர்ந்து பிரச்சினை செய்து வருகிறார்.

இது அவரது மகன்கள் மற்றும் மகள்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதனால் அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக் கொள்கின்றனர். அங்கு இருப்பவர்களுடன் அன்பாக பழகுகிறார் ஊர்வசி.

ஒருநாள் இவரை மருத்துவமனையில் விட்டுவிட்டு மகன் மற்றும் மகள் தத்தம் வீடுகளுக்குச் சென்றுவிட அவர்களுக்கு தன்மீது பாசம் இல்லை என்று நினைத்து அங்கிருந்து கிளம்பி சென்றுவிடுகிறார் ஊரவசி.

ஊர்வசி கொல்கத்தாவில் இருப்பதாக போலீஸ் மூலம் தகவல் வர தினேஷ் மற்றும் மாறன் இருவரும் சென்று தாயை கூட்டி வருமாறு போலீசார் அனுப்புகின்றனர்.

ஆனால் அண்ணன் மாறன் மற்றும் தம்பி தினேஷ் இருவருக்கும் முட்டல் மோதல். இருவரும் எப்படி மொழி தெரியாத ஊருக்கு சென்று தங்கள்  அம்மாவை அழைத்து வருகிறார்கள்,  அவர் மீண்டும் பத்திரமாக இவர்களுடன் சேர்ந்தாரா  என்பதை நெகிழ வைக்கும் வகையில் சொல்லி இருக்கிறார்கள்.

படம் முழுவதும் ஆக்கிரமித்து இருப்பவர் ஊர்வசிதான். ஞாபக மறதியால் செய்யும் லூட்டிகள்,  மகனிடம் அழுதுகொண்டே தனது இயலாமையை சொல்வது, இரவு ரோந்து போலீசிடம் நான் ஸ்டாலின் பிரண்ட் என சொல்லி கலாட்டா செய்வது என அசத்தி இருக்கிறார்.

தினேஷ் வழக்க்போல் இயல்பான நடிப்பை அளித்து உள்ளார்.  அம்மாவை அடித்துவிட்டு பிறகு அதை நினைத்து உடைந்துபோய் அம்மாவிடம் பேசும் காட்சியில் நம்மை கலங்கவைத்துள்ளார்.

வீட்டில் இளைய மகன் கொஞ்சம் அனைத்து விஷயங்களிலும் முன் நின்று செய்வது சில அண்ணன்களுக்கு பிடிக்காது.

அதனால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மையை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் லொள்ளு சபா மாறன். அவரது டிரேட் மார்க் காமெடி அவ்வப்போது நம்மை ரிலாக்ஸ் செய்கிறது.

மற்ற நடிகர்களும் தங்களது இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.

கல்கத்தாவில் சமோசா சாப்பிடும் போது சொல்லி மாறனிடம் நீட்டும் போது அய்யய்யோ வேண்டாம் கடுகை என்னை என்று அவர் அலறுவது அவரது பிரத்தியேக நகைச்சுவை முத்திரை.

கொல்கத்தாவில் தினேஷ் மற்றும் மாறனுக்கு உதவி செய்யும் ராணுவ வீரராக நடித்துள்ளவர் உண்மையில் அம்மாவை தேடிச் சென்ற சகோதரர்களுக்கு உதவியவர் என்பதை இயக்குநர் கடைசியில் சொல்கிறார்.

டோனி பிரிட்டோவின் இசையில் பாடல்கள் நன்று. பின்னணி இசையும் இக்கதைக்கு தேவையானதை செய்து உள்ளது.
ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு கொல்கத்தாவை ரசிக்க வைக்கிறது.   சண்முகம் வேலுச்சாமி எடிட்டிங் கச்சிதம்.

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்று பள்ளியில் படிக்கிறோம்.. ஆனால் பிள்ளைகளால் கைவிடப்படும்  தாய்மார்கள் நம் நாட்டில்தான் அதிகம்.

இந்த விசயத்தை.. கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல், மனதில் பதியும்படி சொன்ன இயக்குநர் சுரேஷ் மாரி பாராட்டுக்கு உரியவர்.