![]()

ஜப்பான் விமர்சனம்
கார்த்தியின் இருபத்தைந்தாவது படமாக வெளிவந்திருக்கும் ஜப்பான், அவரது புகழ் கிரீடத்தில் மற்றும் ஓர் ஒளிவீசும் வைரமாக பிரகாசிக்கிறது.
தோற்றம், உடல் மொழி, வசன உச்சரிப்பு என்று தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி நடித்திருக்கும் கார்த்தி வெகுவாகவே நம்மை ரசிக்க வைக்கிறார்,
நகைக்கடை ஒன்றிலிருந்து இருநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்தக் கடையில் அமைச்சர் ஒருவரின் பினாமி பணம் முடக்கப்பட்டிருப்பதால் காவல் துறையினர் தீவீரமாக கொள்ளையனை தேடுகின்றனர்.
வழக்கமாக இதுபோன்ற கொள்ளையில் ஈடுபடும் ஜப்பான்தான் இந்தக் கொள்ளையை நடத்தியிருக்கலாம் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது. காரணம் இதுபோல் ஜப்பான் ஏற்கெனவே பல கொள்ளைகளை நடத்தியிருப்பதுதான்.
கொள்ளையடித்த நகையை ராபின்ஹூட் பாணியில் வாரி வழங்கியும், ‘சிரிப்பு திருடன் சிங்கார வேலு’ மாதிரி தானே கதாநாயகனாக நடித்து படத்தைத் தயாரித்து அதை வருடக்கணக்கில் வலுக்கட்டாயமாக திரையரங்கில் ஓட வைப்பதுமாக இருக்கிறான் ஜப்பான்.
செய்யாத கொள்ளைக்காக தன்னை போலீஸ் தேடுவதை அறிந்து அதிர்ச்சி அடைகிறான் ஜப்பான். காரணம் அந்தக் கொள்ளையை அவன் செய்யவில்லை.
செய்யாத குற்றத்துக்காக ஜப்பானை துரத்துகிறது போலீஸ். அவர்களிடமிருந்து அவன் எப்படி தப்பினான்…உண்மையில் அந்தக் கொள்ளையை செய்தது யார் என்பதுதான் படத்தின் இரண்டாம் பாதி.
நாயகனை கொள்ளையனாகக் காட்டுவது என்பது கத்தி மேல் நடப்பது போலத்தான். அதை வெற்றிகரமாக செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன். இந்த வெற்றிக்கு அவருக்கு பெருமளவில் உதவியிருப்பது ஜப்பான் வேடம் ஏற்ற கார்த்தியின் நடிப்பு.
படத்தில் இழையோடும் மெலிதான நகைச்சுவை ரசிக்க வைக்கிறது. உதாரணமாக நடிகையான தன் காதலியிடம் “… சினிமாவைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் நல்லாவே நடிக்கிறடீ… ” என்று சொல்லும் காட்சி.
இதேபோல் சுவரில் ஓட்டை சரியாகப் போடாததைப்பற்றி சொல்லும்போது “… ஓட்டை (vote) சரியா போடாதவங்க எல்லாம் ஓட்டை போடறதைப்பத்தி பேசாதிங்க…” என்று சொல்லும் காட்சியை குறிப்பிடலாம்.
படத்தின் மிகப் பெரிய பலம் ரவி வர்மனின் ஒளிப்பதிவு. எண்ணத்தில் நிலைக்கும் வண்ணமயமான ஒளிப்பதிவுக்கு ஒரு சபாஷ்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவான பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.
துவக்கத்திலிருந்து இறுதுவரை படம் விறுவிறுப்பாக செல்வதற்கு பிலோமின்ராஜின் படத்தொகுப்பு வெகுவாக உதவியிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் திருச்சியில் நகைக்கடை ஒன்றின் சுவரை தூளையிட்டு நகைகளை கொள்ளையடித்த முருகன் என்ற கொள்ளைக்காரன் அந்த நகைகளை நடிகைகள் சிலருக்கு பரிசாக வழங்கியதும், தான் ஒரு திரைப்படம் எடுக்கப் போவதாக சொல்லி வலம் வந்ததையும் செய்தித்தாளில் படித்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.
இந்த உண்மைச் சம்பவத்தை வைத்து சினிமாவுக்கு ஏற்ற மாதிரி காட்சிகள் அமைத்து ஜப்பான் படத்தை உருவாக்கியிருக்கிறார் ராஜூ முருகன்.
வழக்கமான பாணி திரைப்படங்களையே பார்த்து சலித்த ரசிகர்களை முற்றிலும் மாறுபட்ட பாணியில் உருவான ஜப்பான் படம் வெகுவாக கவரும் என்பதில் ஐயமில்லை.
தாராளமாகப் பார்த்து மகிழலாம் இந்த ஜப்பான் திரைப்படத்தை.
மதிப்பெண் 4/ 5

