Monday, January 20

ரெய்டு விமர்சனம்

Loading

ரெய்டு விமர்சனம்

எத்தனையோ படங்களில் பார்த்து சலித்துப்போன போலீஸ் அதிகாரியின் கதைதான் ரெய்டு.

கதையை நேர்கோட்டில் சொல்லாமல் காட்சிகளை முன்னும் பின்னும் மாற்றிப்போட்டு கதையைச் சொல்லும் யுக்திக்கு நான் லீனியர் என்று பெயர்.

ரெய்டு படத்தில் அந்த நான் லீனியர் முறையை முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்தி. படத்துக்கு பலமாக அமைய வேண்டிய இந்த யுக்தியே பலவீனமாக அமைந்து பார்வையாளர்களை பதம் பார்க்கிறது.

கதைதான் அரதப்பழயது என்றால் காட்சிகளிலாவது கொஞ்சம் புதுமையாக எதையாவது முயற்சி செய்திருக்கக்கூடாதா?

பெண்களை காதலிப்பதுபோல் நடித்து அவர்களுடன் உறவு கொண்டு அதை படமாக எடுத்து வைத்துக்கொண்டு பிளாக் மெயில் செய்கிறது ஒரு கும்பல். சர்வசாதரணமாக சில பல கொலைகளையும் செய்கிறது இந்தக் கூட்டம்.

இவர்களின் கொட்டத்தை அடக்க என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரம் பிரபு களமிறங்குகிறார். பிறகென்ன… ஒவ்வொருவராக போட்டுத் தள்ளுகிறார்.

விரைப்பான தோற்றத்தில் வரும் விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரி வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். இறுக்கமான முகத்துடன் வசனம் பேசுவதையும், சண்டை போடுவதையும் தவிர வேறு பெரிய வேலை எதுவும் அவருக்கு இல்லை. பாவம் அவர் என்ன செய்வார்… கதாபாத்திரம் அப்படி அமைந்திருக்கிறது.

விக்ரம் பிரபு ஜோடியாக வரும் ஸ்ரீதிவ்யாவை நிீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்க முடிகிறது. ஸ்ரீதிவ்யா வேடத்தைவிட அவரது தங்கையாக வரும் அனந்திகா மனதில் நிற்கிறார்.

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான வேலு பிரபாகரன் தாதா வேடத்தில் வருகிறார். இவரைப் பற்றி கொடுக்கும் பில்டப்பைப் பார்த்தால் பெரிதாக ஏதோ செய்வார் என்று பார்த்தால் படம் முழுவதும் புத்தகம் படித்தபடி இருக்கிறார்.

சாம் சி.எஸ். இசையில் உருவான பாடல்கள் சுமார் ரகம் என்றால் பின்னணி இசை அதைவிட சுமார் ரகம்.

ரிஷி ரித்விக், செளந்தர்ராஜா, டேனியல் ஆனி போப், செல்வா, ஜீவா ரவி, ஜார்ஜ் மரியான் என்று பலரும் படத்தில் இருக்கிறார்களே தவிர சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை. நாயகன் நாயகிக்கு பெரிதாக வேலை இல்லை என்கிறபோது துணை பாத்திரங்கள் பாவம் என்ன செய்துவிடப் போகிறார்கள்.

படத்தில் நடித்த நடிக நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு பட எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்குமே தவிர, வேறு ஒன்றுமில்லை.