ஜீவி 2 – விமர்சனம்

0

 35 total views,  1 views today

ஜீவி 2 – விமர்சனம்

ஒரிரு ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஜீவி திரைப்படம், அதன் வித்தியாசமான கதைக் கருவுக்காகவும், புதுமையான திரை வடிவத்துக்காகவும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததால் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடி படத்தில் நடித்த நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு நல்ல பெயரையும் புகழையும் தேடித் தந்தது.

ஜீவி படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பே இப்போது இரண்டாம் பாகம் உருவாகக் காரணமாக அமைந்திருக்கிறது. ஆஹா ஓடிடியில் ஆகஸ்ட் 19ந்தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.

ஜீவி 2 முதல் பாகத்தைப் பார்க்காமல் தவற விட்டவர்களுக்காக இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்திலேயே முதல் பாகத்தின் முக்கிய பகுதிகளை தொகுத்துக் காட்டியிருப்பதால் முதல் பாகத்தைப் பார்க்காதவர்களும் ஜீவி 2 படத்துக்குள் எளிதாக நுழைந்து விடலாம்.

நாயகன் வெற்றி, ஹவுஸ் ஓனர் அக்காவின் பார்வையற்ற மகளை மணந்து ஷேர் ஆட்டோ ஓட்டி தன் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். ஒரு நாள் நண்பன் கருணாகரனை சந்திக்கிறரா். கருணாகரனுக்கு டீக்கடை ஒன்றையும் வைத்துத் தருகிறார். இருவரும் தங்கள் பழைய நட்பைத் தொடர்கிறார்கள்.

மனைவிக்கு ஆபரேஷன் செய்து கண்பார்வை சரி செய்ய பல லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது வெற்றிக்கு. உடன் பழகும் பணக்கார நண்பன் ஒருவன் வீட்டிலேயே பணத்தைத் திருட முடிவு செய்கிறார் வெற்றி.

ஆரம்பத்தில் கருணாகரன் சற்றே தயங்கினாலும் பின்னர் ஒத்துக்கொண்டு, ஒத்துழைக்கிறார். திட்டப்படி நண்பன் வீட்டில் கொள்ளையை வெற்றிகரமாக செய்து விட்டாலும் நண்பனை அவன் வீட்டிலேயே யாரோ கொலை செய்து விடுகிறார்கள். இதனால் பிரச்னை பெரியதாகிறது.

முதல் பாகத்தில் பாடாய் படுத்திய தொடர்பியல் விதி இரண்டாம் பாகத்திலும் தன் வேலையைக் காட்டத் தொடங்க படம் விறுவிறுப்பாகச் செல்லத் தொடங்குகிறது.

இறுதியில் நண்பனை யார் கொன்றார்கள் எதற்காக கொன்றார்கள் என்பது தெரிகிறது. வெற்றி நம்பும் தொடர்பியில் விதி இத்துடன் முடிகிறதா அல்லது அது இன்னும் தொடருமா….

ஏற்கெனவே செய்த வேடங்கள் என்பதால் வெற்றி, கருணாகரன், ரோகிணி போன்றவர்கள் இலகுவாக தாங்கள் ஏற்ற வேடங்களை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

கண் பார்வை இல்லாதவராக வரும் அஸ்வினியின் முகமும் வசன உச்சரிப்பும் அவர் ஏற்ற வேடத்துக்கு நியாயம் செய்ய துணை நிற்கின்றன.

டி.பிரவீண்குமாரின் ஒளிப்பதிவு வெகு நேர்த்தி என்றால் கே.எல்.பிரவீணின் படத்தொகுப்பு விறுவிறுப்பு. சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசை. மாறுபட்ட கதைக்கருவை எடுத்துக்கொண்டு அதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொன்னதற்காகவே ஜீவி 2 படத்தை எழுதி இயக்கிய வி.ஜே.கோபிநாத்தை தாராளமாகப் பாராட்டலாம்.

தொடர்பியல் விதி குறித்து தனது சந்தேகங்களுக்கு விடை தேட ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி செல்லும் (?) வெற்றி அங்கேயே அமர்ந்து புத்தகத்தை எடுத்து படிக்கும் காட்சியைத் தவிர்த்திருக்கலாம். எந்த லெண்டிங் லைப்ரரியிலும் அங்கேயே அமர்ந்து யாரும் எதையும் படித்துக்கொண்டிருக்க முடியாது அல்லவா?

வழக்கமான மசாலா படங்களைப் பார்த்து சலித்துப் போன ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்தப் படம் வித்தியாசமான விருந்து படைக்கும் என்பதில் ஐயமில்லை. சஸ்பென்ஸ் பட ரசிகர்களுக்கு மட்டுமல்ல… அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஜீவி 2

மதிப்பெண் 3.5 /5

Share.

Comments are closed.