Friday, November 14

காந்தாரா சேப்டர் 1 _ விமர்சனம்

Loading

 

காந்தாரா சேப்டர் 1 _ விமர்சனம்

இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனப்பகுதியான காந்தாரா,  சிவன் தவம் செய்வதற்காக பார்வதி தேவியால் கொடுக்கப்பட்டது என்று அந்தப் பகுதியில் வசிக்கும் மண்ணின் மைந்தர்களான ஆதிவாசிகள் நம்புகிறார்கள்.

வீரத்திலும் போர்க்கலையிலும் சிறந்து விளங்கும் இவர்களை அவ்வளவு எளிதில் யாராலும் வென்று விட முடியாது.

இந்தக் கூட்டத்தில் ஒருவராக திகழ்கிறார் ரிஷப் ஷெட்டி.
காந்தாரா வனப்பகுதியின் அருகிலேயே பாங்காரா என்ற சிறு நாடு இருக்கிறது.

இந்த நாட்டின் மன்னராக இருந்து ஜெயராமன் ஆட்சி செய்து வருகிறார்.

இவரது மகன் குல்சன் தேவய்யா, மகள் ருக்மணி வசந்த்.

இளவரசராக இருக்கும் மகன் குல்சன் தேவய்யாவுக்கு மகுடம் சூட்டி மன்னர் ஆக்குகிறார் ஜெயராமன்.

எப்போது பார்த்தாலும் சோம பானம் அருந்தியபடி போதையில் பெண்களுடன் கூத்தடித்து வரும் தேவய்யாவுக்கு ஈசனின் தோட்டமான காந்தாராவை கைப்பற்ற நினைக்கும் விபரீத ஆசை வருகிறது.

காந்தாரா சென்றால் சாவு நிச்சயம் என்ற ஜெயராமன் எச்சரிக்கையையும் மீறி அங்கு சென்று போரிட்டு படுதோல்வி அடைந்து திரும்புகிறார்.

காந்தாரா மக்கள் பாங்கரா துறைமுகப் பகுதிக்கு சென்று அங்கு தங்கள் பகுதியில் விளைந்த விளை பொருட்களை வியாபாரம் செய்ய தொடங்குகிறார்கள்.

இந்த செய்தி மன்னன் குல்ஷனுக்கு தெரிய வர, காந்தாராவையே காலி செய்ய நினைத்து பெரும் படையுடன் புறப்படுகிறார்.

காந்தாராவை அங்குள்ள மக்கள் எவ்வாறு காப்பாற்றினார்கள்? என்பதுதான் காந்தாரா சேப்டவேர் 1 படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டியே படத்தை விறுவிறுப்பான முறையில் இயக்கி இருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் காந்தாரா சேப்டர் 1 முந்தைய பாகத்தை விட எல்லா விதத்திலும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

பிரம்மாண்டமான தயாரிப்பையும் ஏராளமான பொருட்செலவில் படமாக்கப்பட்ட காட்சிகளையும் பார்த்தால், ஆங்கிலப் படங்களுக்கே இந்தியத்  திரையுலகம் சவால் விடலாம் என்றால் மிகை ஆகாது.

பயமுறுத்தும் வகையில் வரும் புலி,  மிகப் பெரிய குழிக்குள் விழுந்து மறைந்து,  திடீரென அதிலிருந்து மேலே எழும் காட்சிகள் என்று வி எஃப் எக்ஸ் பணிகள் அனைத்தும் பிசிறின்றி அபாரமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு படத்தை இன்னொரு தளத்துக்கு உயர்த்துகிறது. குறிப்பாக படத்தின் துவக்கத்தில் துறைமுகப் பகுதியில் ரிஷப் ஷெட்டி கயிற்றில் தொங்கிக் கொண்டே தாவித் தாவி சென்று சண்டையிடும் காட்சியில் ஒளிப்பதிவாளரின் திறமை நன்கு பளிச்சிடுகிறது.

அஜ்னீஷ்லோக்நாத்தின் பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.

வில்லனாக வரும் குல்என் தேவய்யாவின் அலட்சியமான நடிப்பு அமர்க்களமாக அமைந்திருக்கிறது.

மன்னர் வேடத்தில் வரும் மலையாள நடிகர் ஜெயராம் நிறைவாகச் செய்திருக்கிறார். நாயகி வேடம் ஏற்ற ருக்மணி வசந்துக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும் கொடுத்த பாத்திரத்தை குறைவின்றி செய்திருக்கிறார்.

மிகச் சிறந்த திரைப்பட அனுபவத்தை பெறவேண்டும் என்று நினைக்கும் ரசிகர்கள் தவறாமல் திரையரங்குக்கு சென்று இந்த படத்தை ரசிக்கலாம்.

அனைவரும் காண வேண்டிய அசத்தலான படம் காந்தாரா சாப்டர் ஒன்.

மதிப்பெண்4.5/5