![]()
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் புதையல், அதைத் தொடர்ந்து நடக்கும் கொலை என்று விறுவிறுப்பாகத் தொடங்கும் கபடதாரி இறுதிவரை அந்த விறுவிறுப்பு குறையா வண்ணம் உருவாக்கப்பட்டதற்காக முதலில் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியைப் பாராட்ட வேண்டும்.
போக்குவரத்து காவலராக இருக்கும் சிபிராஜுக்கு குற்றப் பிரிவு காவலராகப் பணியாற்ற வேண்டும் என்பது ஆசை. எனவே புதையல் தொடர்பாக நடந்த இந்தக் கொலைகளின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முற்படுகிறார். அவருக்கு உதவ புலனாய்வு பத்திரிகை ஆசிரியர் ஜெயபிரகாஷ் முன் வருகிறார்.
இந்த கொலைகள் நடந்த சமயத்தில் இவற்றை விசாரித்த காவல்துறை அதிகாரி நாசர் ஆரம்பத்தில் சிபிராஜூக்கு உதவ மறுத்தாலும் பின்னர் மனம் மாறி முக்கிய தகவல்களைத் தருவதுடன் உடனிருந்தும் உதவுகிறார்.
இந்தக் கொலைகள் தொடர்பாக சாட்சியம் அளித்தவர்களில் ஒருவர் சொன்னது பொய் என்பது தெளிவாகும் நிலையில் அந்த நபர் யார் என தேடுதல் வேட்டை தொடர்கிறது.
சந்தேகப் பட்டியலில் இருக்கும் நபர்கள் ஒவ்வொருவராக விலக்கப்படுவது, ஒரு பாடல் காட்சியுடன் திரையில் தோன்றும் யுக்தி ரசிக்கும்படி இருக்கிறது. இறுதியில் ஓவ்வொரு மர்ம முடிச்சாக அவிழ்க்கப்படுகிறது…
காவலர் வேடத்துக்கு சிபிராஜின் உயரம் கச்சிதமாகப் பொருந்துவதால், இயல்பாகவே அவருக்கு அந்த கம்பீரம் வந்துவிடுகிறது. நாயகி நந்திதா ஸ்வேதாவுக்கு அதிக வேலை இல்லை என்றாலும், ஏற்ற பாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார். நாயகன் சிபி சத்தியராஜூக்கு அடுத்து நினைவில் நிற்பர்கள் ஜெயப்பிரகாஷ் மற்றும் நாசர். வலுவான பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்தின் துவக்கத்தில் பாலம் கட்டும் பணியின்போது எலும்புக்கூடு ஒன்று கிடைக்கும் காட்சி பருந்துப் பார்வையில் படமாக்கப்பட்டிருப்பதில் ஒளிப்பதிவாளர் ராசாமதியின் முத்திரையின் தெரிகிறது.
படத்திற்கு உயிர் தருவது சைமன் கே.கிங்கின் இசை என்றால் மிகையாகாது. பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார் மனிதர்.
இதுபோன்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் வகைப் படங்களுக்கு பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது என்றாலும், பாடல்களும் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. குறிப்பாக கபடதாரி பாடலைச் சொல்லலாம்.
படத்தின் விறுவிறுப்புக்கு வெகுவாக துணை நிற்பது எடிட்டர் கே.எல்.ப்ரவீணின் படத்தொகுப்பு.
கபடதாரி கண்டிப்பாக காணவேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர்.

