Tuesday, June 16

குபேரா_ விமர்சனம்

Loading

கடலுக்கு அடியில் ஏராளமான எரிபொருள் வளம் இருப்பதை ஆய்வுக் குழு ஒன்று கண்டுபிடிக்கிறது.

இந்த எரிபொருள் வளத்தைக் கொண்டு 15 ஆண்டுகளுக்கு  இந்தியா எந்த நாட்டையும் சார்ந்திடாமல் எரிபொருள் தேவையை சுயசார்புடன்  பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

இந்தத் துறை சம்பந்தமான மத்திய அமைச்சரை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு  தன் சுய லாபத்துக்கு இந்த எரிபொருள் வளத்தை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் தொழிலதிபர் நீரஜ் மித்ரா.

இதற்கான லஞ்சப் பணம் ஒரு லட்சம் கோடி ரூபாயை யார் யாருக்கு எவ்வளவு கருப்பு பணமாக தர வேண்டும் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி தொழிலதிபர் நீராஜ் மித்ராவிடம் கொடுக்கிறார் அமைச்சர்.

தொகை பெரிதாக இருப்பதால் இதை சரியான ஆளிடம் கொடுத்து செய்ய வேண்டும் என திட்டமிடுகிறார் நீரஜ்.

குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி சிறையில் இருக்கும் நேர்மையான சிபிஐ அதிகாரியான நாகர்ஜுனாவை வெளியே கொண்டு வந்து இந்த காரியத்துக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிடுகிறார் நீரஜ்.

லஞ்சப் பணத்தை வெற்றிகரமாக கைமாற்றி விட்டால் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து மீண்டும் சிறைக்கு செல்லாதவாறு அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக உறுதி அளித்து நாகார்ஜுனாவை இந்த திட்டத்தில் ஈடுபடுத்துகிறார் நீராஜ்.

பிச்சைக்காரர்கள் சிலரை தேர்வு செய்து,  அவர்கள் பெயரில் பினாமி கம்பெனியை துவக்கி லஞ்சப் பணத்தை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்புவதுதான் நாகர்ஜுனாவின் திட்டம்.

இதற்காக தனுஷ் உட்பட நான்கு பிச்சைக்காரர்களை தேர்வு செய்யப் படுகிறார்கள்.

பல் துவக்குவதில் ஆரம்பித்து கையெழுத்து போடுவது வரை அனைத்து அடிப்படை பழக்கவழக்கங்களும் இவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

இவர்களில் ஒரு பெண்ணும் அடக்கம்.
பணம் கை மாறிய பிறகு இந்த பினாமிகளை கொன்று விடுவது தான் நீரஜின் திட்டம்.

ஆனால் நாகார்ஜுனாவுக்கு  இதில் உடன்பாடு இல்லை என்றாலும் முதல் நபரை பணம் கைமாற்றியதும் கொன்று விடுகிறான் நீரஜின் அடியாள்.

மேலும் கர்ப்பமாக இருக்கும் பிச்சைக்கார பெண்ணை நீரஜின் அடியாள் ஒருவன் பலாத்காரம் செய்ய முயல,  தனுஷ் அதை தட்டிக் கேட்டு தடுக்கிறார்.

இதிலிருந்து பிரச்சனை ஆரம்பமாகிறது.  சாமார்த்தியமாக அவர்களிடமிருந்து தப்பி வந்து விடுகிறார் தனுஷ்.

நீரஜ் திட்டமிட்டபடி லஞ்சப்பணம் கை மாறியதா?

அதை தடுக்க தனுஷ் எப்படி எல்லாம் போராடினார்?

உண்மை நிலை தெரிய வரும்போது நாகர்ஜுனா என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என்பதுதான் குபேரா படத்தின் கதை.

திரைப்படம் சுமார் மூன்று மணி நேரம் ஓடினாலும்  அது பார்வையாளர்களுக்கு தெரியவில்லை. காரணம் விறுவிறுப்பான திரைக்கதைதான்.

தனுஷின் புகழ் கிரீடத்தில் மற்றும் ஓர் ஒளி வீசும் வைரம் ‘குபேரா’ என்றால் மிகையாகாது.

அடக்கி வாசிக்க வேண்டிய பிச்சைக்காரன் வேடத்தை அற்புதமாக செய்திருக்கிறார் தனுஷ். அப்பாவித்தனமான கேள்விகளை கேட்பதாகட்டும்,  அநியாயத்தை எதிர்த்து அதிரடி காட்டுவதாக இருக்கட்டும் அனைத்திலும் சோபிக்கிறார் தனுஷ்.

நேர்மையான அதிகாரியாக இருந்து, தவறானவர்களுடன் இணைந்து தடம் மாறும் பாத்திரத்தில் நாகர்ஜுனா பளிச்சிடுகிறார்.

தனுஷால் தொடர்ந்து தொல்லைகள் வருவதால் அவரை திட்டிக் கொண்டே  ராஷ்மிகா மந்தனா  உதவிகளை செய்வதெல்லாம் ரசிக்கும்படியான காட்சிகள்.

“என் சாவ நான் சாகுறேன்… உன் சாவ நீ சாவு”  என்று தனுஷிடம் சொல்லிக் கொண்டே வேறு வழியின்றி அவருடன் பயணிக்கும் ராஷ்மிகாவும் கவனம் ஈர்க்கிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.

‘போய் வா பாடல்…’ இந்த ஆண்டின் ஹிட் பாடலில் ஒன்றாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நிக்கத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது என்றால் மிகையாகாது.

குறிப்பாக திருப்பதி மற்றும் மும்பை வெளிப்புற காட்சிகள் மிக அற்புதமாக படமாக்கப்பட்டு இருக்கின்றன.

அரைத்த மாவையே அரைக்காமல்,  வித்தியாசமான கதையை கையில் எடுத்து, அதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் திரையில் சொல்லிய இயக்குனர் சேகர் கம்முலாவை தாராளமாக பாராட்டலாம்.

குடும்பத்துடன் காண வேண்டிய தரமான பொழுதுபோக்கு சித்திரம் குபேரா.

மதிப்பெண் 4/5