![]()
லிட்டில் விங்ஸ்_ குறும்பட விமர்சனம்
Feature film வணிக ரீதியான கட்டமைப்புக்குள் சிக்குண்டிருப்பதால், அதில் செய்ய முடியாத சோதனை முயற்சிகளை குறும்படத்தில் செய்யலாம்.
இதன் காரணமாகவே பெரும்பாலான குறும்படங்கள் தரமானவையாக மலர்வதுண்டு.
அப்படிப்பட்ட நல்லதொரு படைப்புதான் ‘லிட்டில் விங்ஸ்’ குறும் படம்.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தாலும் ஆண் பேரினவாதத்தின் அடையாளமாகத் திகழும் கணவன், அவன் செய்யும் அக்கிரமங்கள் அனைத்தைம் பொறுத்தபடி ‘ஆக்கி’ போட்டுக் கொண்டே, வேலைக்கு சென்று பொருளீட்டும் மனைவி என இரண்டு பிரதான பாத்திரங்களை மட்டும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட 21 நிமிட குறும்படம் இது.

தன் வயிற்றில் குழந்தையை சுமந்து பெறாத இந்த மனைவி, கோழிகளை தன் சொந்த பிள்ளைகளைப்போல் பார்த்து பார்த்து தீனி போட்டு வளர்க்கிறாள்.
குஞ்சு பொரிப்பதற்காக கோழி அடைகாக்கும் முட்டைகளை தாய்மை ததும்பும் கண்களுடன் ஆசையாக அவ்வப்போது எடுத்துப் பார்க்கிறார்.
சேவலை அடித்து குழம்பு வைத்து தரச் சொல்லி சண்டை போட்ட பிறகும் மனைவி மறுப்பதால் கோபம் கொண்டு அடைகாக்கப்படும் முட்டைகளை தூக்கி எறிந்து உடைக்கும் கையாலாகாத கணவனின் கதி அதோ கதியாகிவிடுறது.
“சனி பிணம் தனியே போகாது” என்பதால் பலி கொடுப்பதற்காக இறந்தவன் உடலுடன், அவன் சமைத்து சாப்பிட ஆசைப்பட்ட இந்த கோழியும் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கை கால் வராத நிலையிலும் உண்டி வில்லை கால் விரல்கள் இடையே இறுக்கிப்பிடித்து கோழியை அடித்து கொல்ல முயலும் காட்சி கணவனின் ஈரமற்ற இயல்புக்கு சாட்சி என்றால், கோழி முட்டையை தன் வயிற்றில் வைத்து பார்க்கும் நெகிழ வைக்கும் காட்சி மனைவியின் பேரன்புக்கு சாட்சி.
திரையில் தோன்றும் பாத்திரங்களின் மிகை இல்லாத இயல்பான நடிப்பு மற்றும் திரைக்கு பின் இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் நேர்த்தியான பங்களிப்பு ஆகியன ஒன்றிணைந்து உருவாக்கி இருக்கும் இந்த படைப்பு குறும்படமாக இருந்தாலும் நிறைவை தருகிற படம்.
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் youtube சேனலில் வெளியாகும் இப்படத்தை அனைவரும் கண்டு ரசிக்கலாம்.
லிட்டில் விங்ஸ் _ குறும்படத்தின் முன்னோட்டம்:
