மாமன் _ விமர்சனம்
முதல் ஓரிரு காட்சிகளிலேயே பார்வையாளனை தன்னுள் இழுத்துக் கொள்ளும் வல்லமை சில திரைப்படங்களுக்கு உண்டு. அந்த வகையில் அமைந்த படம்தான் மாமன்.
திருமணமாகி பத்து ஆண்டுகள் கழிந்த பின்னர் பாபா பாஸ்கர்_சுவாசிகா தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. சுவாசிகாவின் தம்பி சூரி.
அக்கா ஆசிரியையாகப் பணியாற்ற, அக்கா கணவரும் தன் தொழிலில் மிகவும் பிஸியாக இருக்க, இருவரை காட்டிலும் அதீத அன்பு செலுத்தி அந்த குழந்தையை கவனித்துக் கொள்கிறார் தாய் மாமன் சூரி.
சுவாசிகா கருத்தரித்த காலத்திலிருந்து, குழந்தை பெற்றெடுக்கும் காலம் வரை அக்காவை அக்கறையாக கவனித்துக் கொள்ளும் தம்பி சூர்யாவின் மீது டாக்டர் ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஓர் ஈடுபாடு ஏற்படுகிறது. சூரிக்கும் டாக்டரை பிடித்து விட இருவருக்கும் திருமணம் நடக்கிறது.
புதுமணத் தம்பதிகளுக்கு ஒதுக்கப்பட்ட முதல் இரவு அறையில், பூ மற்றும் அலங்காரத்திலிருந்து அனைத்தையும் கலைத்து போடும் சிறுவன், புதுமண தம்பதிகள் இருவருக்கு மத்தியிலும் பிடிவாதமாக படுத்து கொள்கிறான்.
‘முதல் இரவு’ அன்று நடக்காத ‘முதலிரவு’ மேலும் பல நாட்களுக்கும், வாரங்களுக்கும் தொடர்கிறது.
இருவரும் தேன்நிலவுக்கு புறப்பட்டபோதும், தானும் வந்தே ஆவேன் என்று அடம் பிடிக்கிறான் அந்த சிறுவன்.
பிரிக்கவே முடியாத அளவுக்கு சூரியுடன் சிறுவன் ஒட்டிக் கொண்டிருப்பதும், அதை தவிர்க்கவோ தடுக்கவோ முடியாமல் சூரி திணறுவதும் தொடர்கதையாக நீண்டு கொண்டே போகவே செய்வதறியாது திகைக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
ஓர் அசாதாரண சூழ்நிலையில் குடும்பமே இரண்டுபட்டுப் போகிறது.
தாய்மாமன் மீது தன் மகன் காட்டும் பிரியத்தை மறக்கச் செய்வதற்காக எந்த பெண்ணும் செய்யத் துணியாத ஒரு காரியத்தை செய்கிறார் சுவாசிகா.
இதனால் சிக்கல் பெரிதாகி உறவுகளே துண்டிக்கப்படும் நிலைக்கு செல்கிறது.
இறுதியில் நடந்தது என்ன என்பதை உணர்ச்சிகரமான காட்சிகள் மூலம் திரையில் சொல்கிறார் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்.
நகைச்சுவை நடிகராக இருந்து, கதையின் நாயகனாகி இப்போது ‘மாமன்’ படத்தின் மூலம் முழு கதாநாயகனாக பரிணாமம் பெற்றிருக்கிறார் சூரி.
“மாலை சுற்றிப் பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது என்பதற்கு நான்தானே கவலைப்பட வேண்டும்” என்று சூரியிடம் ஐஸ்வர்யா லட்சுமி சொல்லி தனது காதலை வெளிப்படுத்தும் காட்சி அழகோ அழகு.
கிடைக்கின்ற வாய்ப்புகள் எல்லாம் சிங்கிள், ஃபோர், சிக்ஸர் என்று விளாசித் தள்ளியிருக்கிறார் சுவாசிகா.
ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ், பாலசரவணன், கீதா கைலாசம் என்று அனைத்து வேடங்களுமே நினைவில் நிற்கும் அளவுக்கு பாத்திரப் படைப்புகள் அமைந்திருக்கின்றன.
தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு படத்தை இன்னும் உயரத்துக்கு எடுத்துச் செல்கிறது.
தாய் மாமனுடன் ஒட்டிக் கொள்ளும் சிறுவன் வேடத்தில் பிரகீத் சிவன் பின்னி எடுத்து இருக்கிறார்.
ஹேசம் அப்துல் வஹாப் இசையில் உருவான பாடல்கள் மனதை வருடுகின்றன.
சிறுவன்_சூரி பாசக்காட்சிகள் ஆரம்பத்தில் இனிப்பு போல் சுவையாக இருந்தாலும், போகப்போக திகட்ட ஆரம்பித்து விடுகிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.
உறவு முறைகளையும் குடும்ப சிக்கல்களையும் ரசிக்கும் விதத்தில் படமாக்கியதற்காக படக்குழுவையும் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜையும் தாராளமாக பாராட்டலாம்.
மதிப்பெண் 3.5/5