Friday, January 24

மகாராஜா _ விமர்சனம்

Loading

மகாராஜா _ விமர்சனம்

சிறிய முடிதிருத்கம் ஒன்றில் வேலை பார்க்கிறார் மகாராஜா (விஜய் சேதுபதி). அவரது மனைவி விபத்தில் மரணடைந்துவிட, மகள் ஜோதி (சச்சனா)யை கண்ணுக்குள் வைத்து காப்பாற்றி வளர்க்கிறார்.
ஒரு சந்தர்ப்பத்தில் மகள், ஸ்போர்ட்ஸ் கேம்புக்காக வெளியூர் சென்றுவிட, வீட்டில் தனியாக இருக்கிறார் மகாராஜா.
அடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.
இரவு, வேலை முடித்து வீட்டுக்கு வந்த தன்னை தாக்கிவிட்டு, வீட்டிலிருந்து ‘லக்ஷ்மி’யை சிலர் திருடிச் சென்றுவிட்டதாகவும், அதனை மீட்டு கொடுக்குமாறும் கூறுகிறார்.

ஆரம்பத்தில் புகாரை காவலர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், ரூ.7 லட்சம் வரை (லஞ்சம்) கொடுப்பதாக மகாராஜா சொல்ல.. காணாமல் போன ‘லக்ஷ்மி’யை கண்டுபிடிக்க, களம் இறங்குகின்றனர் காவலர்கள்.

யார் இந்த லக்ஷ்மி, மகராஜாவின் நோக்கம் என்ன, அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

சலூன் கடை ஊழியர், மகாராஜாவாக வருகிறார் விஜய் சேதுபதி. சோகம் படர்ந்த முகம், அதன் உள்ளே மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆத்திரம்… என அற்புதமாக நடித்து இருக்கிறார். சண்டை காட்சிகளிலும் தூள் பரத்துகிறார்.
அனுராக் காஷ்யப் சிறப்பாக நடித்து உள்ளார். ஆனாலும், லிப் சிங்கிங் சரியில்லை. ஆகவே பாத்திரத்துடன் ஒன்ற முடியவில்லை.
நட்டி நட்ராஜ் காவல் துறை அதிகாரியாக அதகளம் செய்கிறார். 

சிங்கம் புலியின் பாத்திரப் படைப்பும் அவரது நடிப்பும் அபாரம்.

அபிராமி, வினோத் சாகர், பாய்ஸ் மணிகண்டன், முனீஷ்காந்த் உள்ளிட்ட அனைவரும் இயல்பான நடிப்பை அளித்து உள்ளனர்.

அதே போல ஜோதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சச்சனா கவனத்தை ஈர்க்கிறார்.  பாரதிராஜா எதற்காக இப்படி ஒரு சிறிய பாத்திரத்துக்கு தேவைப்பட்டார்?

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு, அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசை, ஃபிலோமின் ராஜின் எடிட்டிங் ஆகியவை படத்துக்கு பலம்.

போலீஸ்காரர்களின் அதீத தாக்குதலை வெறும் காமெடி காட்சியாக ஆக்கி இருப்பது, சமுதாயத்தைப் பாதிக்கும் முக்கியமான பிரச்சினை கையில் எடுத்துவிட்டு அதை வெறும் பழிக்குப்பழி க்ரைம் போல மாற்றி இருப்பது என சில மைனஸ்கள் உண்டு. அதே போல முதல் குற்றவாளியை விஜய் சேதுபதி எப்படி கண்டுபிடித்தார், அனுராக் காஷ்யப்பை ஏன் கொல்லாமல் விட்டார் போன்ற லாஜிகலான கேள்விகளும் எழாமல் இல்லை.

ஆனாலும் ‘நான் லீனியர்’ பாணியில் காட்சிகளை முன்னுக்குப் பின்னாக களைத்துப் போட்டு, கவனத்தை ஈர்த்து இருக்கிறார் இயக்குநர் நிதிலன் சாமிநாதன். அதே போல ஆரம்பத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை, அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்.

பார்த்து ரசிக்கத் தக்க தரமான படைப்பு.

மதிப்பெண் 4.5/5