43 total views, 1 views today
மஞ்சக்குருவி – திரை விமர்சனம்
கோவில் நகரமாம் கும்பகோணத்தில் நடக்கும் கதை.
காசு கொடுத்தாலா கை, கால்களை எடுத்து விடுவதையே பிழைப்பாகக் கொண்டவர் கிஷோர். அவரது பெயரைக் கேட்டாலே ஊரே நடுநடுங்கும் வகையில் வைத்திருக்கிறார்.
அம்மா அப்பா இல்லாத கிஷோருக்கு அன்புத் தங்கை நீரஜாதான் எல்லா உறவும். நீரஜாவை விஷ்வா காதலிக்க, மனதிற்குள் விஷ்வாமீது ஈடுபாடு இருந்தாலும் அவரது காதலை ஏற்க மறுக்கிறார் நீரஜா.
காரணம் தன்னுடன் காதல் வசப்பட்ட ஒரே காரணத்துக்காக இளைஞன் ஒருவனை தன் அண்ணன் கொலை செய்துவிட்டதைச் சொல்லி தன்னை மறந்து விடச் சொல்கிறார் நீரஜா.
இந்த சூழ்நிலையில் கிஷோரை மற்றொரு கோஷ்டி கொலை செய்ய முயற்சிக்கும்போது, தக்க சமயத்தில் தன் நண்பர்களுடன் வந்து அவரைக் காப்பாற்றுகிறார் கிஷோர்.
இதற்காக நன்றி தெரிவித்து கிஷோர் கொடுக்கும் பணத்தையும் வாங்க மறுக்கிறார் விஷ்வா. பணத்துக்காக யார் எவர் என்று பார்க்காமல் கொலை செய்வதையே தொழிலாகக் கொண்ட தன்னுடைய உயிரைக் காப்பாற்றியதற்கு கொடுக்கும் பணத்தைக்கூட வேண்டாம் என்று மறுக்கும் விஷ்வாமீது கிஷோருக்கு அன்பும் மரியாதையும் ஏற்படுகிறது.
தொடர்ந்து கிஷோருடன் நெருங்கிப் பழகி அவரை கொஞ்சம் கொஞ்சமாக நல்வழிக்கு மாற்றுகிறார் விஷ்வா. ஒரு சந்தர்பத்தில் தன் தங்கை நீரஜாவை விஷ்வாவுக்கே திருமணம் செய்து கொடுத்துவிட்டு, தான் போலீஸில் சரண்டர் ஆக நினைக்கிறார் கிஷோர்.
ஆனால் அந்த இடத்தில்தான் விதி விளையாடுகிறது….
இறுதியில் காதலர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதே மஞ்சக் குருவி படத்தின் கதை.
பள்ளி மாணவனைப்போல் இருக்கும் விஷ்வா கம்யூனிஸம் பேசுகிறார்… காரல் மார்க்ஸ் படிக்கிறார். குருவி தலையில் பனங்காய்?
குழந்தைத்தனமான முகம் கொண்ட நாயகி நீரஜா அழகாக இருக்கிறார். நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது.
சீரியஸாகச் செல்லும் கதையோட்டத்தில் கஞ்சா கறுப்பு, சுப்பராஜ் மற்றும் விஷ்வா நண்பர்கள் அடிக்கும் லூட்டி கொஞ்சம் ஆறுதலாக அமைந்திருக்கிறது.
இசையும் பாடலும் பரவாயில்லை ரகம்தான்.
படத்தின் முடிவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.
ஆயினும் மஞ்சக்குருவி படத்தின் இயக்குநர் அரங்கன் சின்னத்தம்பி பாஸ் மார்க் வாங்கிவிட்டார்.