காணாமல் போன நண்பனைத் தேடி இரண்டு இளைஞர்கள் தெருத்தெருவாக அலைவதில் ஆரம்பிக்கிறது மயூரன்.
நண்பர்கள் இருவரும் பைக்கில் தெருத்தெருவாக சுற்றி அலைந்து ஏதோ ஒரு குழந்தையைத் தேடுவதைப்போல், எதிர்படுகிறவர்களிடம் கேள்விகள் கேட்டு விசாரிப்பதையே இடைவேளைவரை காட்டுகிறார்கள் என்றால் படம் எப்படி இருக்கும் என்பதை நீங்களை புரிந்து கொள்ளலாம்.
தாளாளர் ஒருவரே தன் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களை வைத்து போதை மருந்து கடத்துவதாக ஒரு அபத்தமான கதைக் களத்தை அமைத்துக்கொண்டு அதை படமாக வேறு எடுத்திருக்கிறார்கள்.
ஆர்வக்கோளாறில் நடிக்க வருபவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு படமெடுக்கும் உப்புமா கம்பெனி படத்தில் வரும் நடிக நடிகையரைப்போல் இருக்கிறார்கள் இந்தப் படத்தில் நடித்திருப்பவர்கள்.
வில்லனாக வரும் வேல.ராமமூர்த்திதான் படத்தில் தெரிந்து ஒரே முகம். இவர் பெரிய்ய்ய்ய எழுத்தாளராம். படத்தில் இவர் ஒரு வசனம் பேசுகிறார் பாருங்கள்… அடடா.. பிரமாதம். மயூரன் படம் எந்த தரத்தில் இருக்கிறது என்பதற்கு அந்த வசனமே சான்று.
“இன்று விடிவதற்குள் அவனைக் கண்டுபிடித்து கொண்டு வாருங்கள்” என்று பகல் காட்சி ஒன்றில் வசனம் பேசுகிறார்.
வசனம் எழுதிய பிரகஸ்பதிதான் இப்படி எழுதிவிட்டார் என்றாலும், எழுத்தாளரான இவர் அதைத் திருத்தியிருக்க வேண்டாமா சரி படப்பிடிப்பில் அப்படி பேசி விட்டார் என்றாலும் டப்பிங்கின்போதாவது சரி செய்து பேசியிருக்கலாம். அதையும் செய்யவில்லை.
ஒரு பானை சோற்றில் ஒரு பருக்கைக்கூட பதம் இல்லை.
சிறிய படங்களுக்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை தர மறுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்களே. 150 ரூபாய் 200 ரூபாய் செலவு செய்து படம் பார்க்க வரும் ரசிகர்கள் இப்படிப்பட்ட படங்களை பார்த்து ஜீரணிக்க முடியாத கோபத்தில் இருக்கைகளைக் கிழித்தெறிந்துவிட்டு சென்றுவிட்டால் யார் பொறுப்பேற்பார்களாம்?