Saturday, March 7

மெய்யழகன் _ விமர்சனம்

Loading

மெய்யழகன் _ விமர்சனம்

நடிப்பு: கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி, சுவாதி, ஸ்ரீ ரஞ்சனி, இளவரசு மற்றும் பலர்

தயாரிப்பு : 2D என்டர்டைன்மெனட் சூர்யா ஜோதிகா

இசை: கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜ்

இயக்கம்: சி. பிரேம் குமார்

பிஆர்ஓ : ஜான்சன்

காதல் காட்சிகள் இல்லாமல், டூயட் பாட்டுகள் இல்லாமல், அதிரடி சண்டை காட்சிகளும் இல்லாமல் தரமான ஒரு படத்தை சுவைபட தர முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார்.

தஞ்சை மாவட்டத்தின்  நீடாமங்கலத்தில் இருக்கும் தங்கள் பாரம்பரிய வீட்டையும்,  சொத்துக்களையும் குடும்ப தகராறு காரணமாக இழந்து சென்னையில் குடியேறுகிறது அரவிந்த்சாமியின் குடும்பம்.

சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தங்கை உறவு முறையில் உள்ள ஒரு பெண்ணின் திருமணத்திற்கு பிறந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அரவிந்த்சாமிக்கு. வேண்டா  வெறுப்பாகவே புறப்படுகிறார். ஒரே நாளில் திரும்பி வந்துவிடும் எண்ணம்.

அதுவும் திருமண முகூர்த்த நாளின்போது  இல்லாமல், முதல் நாள் வரவேற்பு முடிந்ததுமே சென்னை திரும்ப திட்டம். ஆனால் அங்கு சந்திக்கும் உறவுக்கார இளைஞர் ஒருவர் ‘அத்தான்’… ‘அத்தான்’…என்று அரவிந்த்சாமி மீது பாச மழை பொழிகிறார்.

அன்புத் தொல்லை தரும் இந்த இளைஞன் யார் என்று அரவிந்த்சாமி அறிய முற்படுகிறார். ஆனால் அது இயலவில்லை.

சென்னை திரும்ப இருந்த பஸ்ஸையும் அரவிந்த்சாமி தவற விடுவதால் அன்று இரவு அந்த கிராமத்திலேயே தங்க வேண்டிய நிர்பந்தம். அந்த இளைஞன பேசுகிறார்…  பேசுகிறார்…  இரவு முழுக்க அரவிந்த்சாமியுடன் பேசிக் கொண்டே இருக்கிறார்.

அந்த இளைஞன் போன் நம்பரை கேட்ட போது கூட தன்னுடைய நம்பரை கொடுக்காமல் தப்பான வேறு ஒரு நம்பரை கொடுக்கிறார் அரவிந்த்சாமி.

அந்த இளைஞன் காட்டும் அன்பை எதிர்கொள்ள முடியாமல் அவரிடம் சொல்லாமலே சென்னை புறப்பட்டு விடுகிறார் அரவிந்த்சாமி.

சென்னை வந்ததும் அவருக்கே குற்ற உணர்வு ஏற்படுகிறது இவ்வளவு அன்பு காட்டிய அந்த இளைஞனின் பெயர் கூட என்னவென்று தெரிந்து கொள்ளாமல் வந்து விட்டதை நினைத்து அரவிந்த்சாமி வருந்துகிறார்.

இறுதியில் அந்த இளைஞர் யார் என்பது அரவிந்த்சாமிக்கு தெரிய வருகிறது….

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இரண்டு ஆண்கள் பேசிக் கொண்டிருப்பதையே ஒரு முழு நீள படமாக, எந்த இடத்திலும் போர் அடிக்காமல் சுவை விட சொல்ல முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார்.

அரவிந்த்சாமி மீது பாச மழை பொழியும் இளைஞராக கார்த்தி மிக இயல்பாகவும் பிரமாதமாகவும் நடித்திருக்கிறார். அவரது திரையுலக பயணத்தில் இதைப்போன்ற ஒரு பாத்திரம்  கார்த்திக்கு கிடைப்பது சந்தேகமே.

கார்த்திக்கு ஈடு கொடுக்கும் வகையில் அரவிந்த்சாமியின் மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சிறிய வேடங்களில் வரும் ராஜ்கிரண், தேவதர்ஷினி, ரேச்சல் ரிபேகா போன்றவர்களும் மனதில் பதிகிறார்கள்.

மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. வெளிப்புறங்களில் நடக்கும் இரவுக்கு காட்சிகளையும் அவ்வளவு அழகாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

கோவிநிதி வசந்தாவின் பின்னணி இசை படத்திற்கு  உயிர் கொடுத்திருக்கிறது என்று சொன்னால் மிகை இல்லை. திருமண மண்டபத்தில் “உங்களையே திருமணம் செய்து கொண்டிருக்கலாமோ…” என்று அரவிந்த்சாமியிடம் சொல்லும் பெண், பின் பக்கமாக வரும்போது அவரது முதுகில் லேசாக கையில் வருடி விட்டு செல்வது, படம் எடுத்து ஆடும் பாம்பை பார்த்து கார்த்தி வணக்கம் போடுவது,  என்றெல்லாம் ரசிகத் தகுந்த காட்சிகள் படத்தில் ஏராளமாகவே இருக்கின்றன. குடும்ப உறவுகளை விட்டு விலகிச் செல்லக்கூடாது,  தவறு செய்த மனிதர்களையும் மன்னிக்க வேண்டும் போன்ற நல்ல கருத்துக்களை ஆழமான கதையுடன் அழகாக சொல்லி இருக்கும் படம் தான் மெய்யழகன்.

கண்டிப்பாக ஒவ்வொருவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய தரமான படம்

ரேட்டிங் 4/5.