சட்டம் என் கையில் _ விமர்சனம்
துவக்கத்திலிருந்து இறுதிவரை இப்படி ஒரு விறுவிறுப்பான படத்தை பார்த்து எவ்வளவு காலம் ஆயிற்று?
ஒரே இரவில் நடக்கும் அட்டகாசமான அதிரடி த்ரில்லர் சட்டம் என் கையில்.
ஏற்காடு மலை… இரவு நேரம்… ஏதோ சிந்தனையுடனும், ஒருவகை பரபரப்புடனும் மது அருந்தியபடி காரை ஓட்டிக்கொண்டு வருகிறார் சதீஷ்.
காரிருள் நேரத்தில் எதிரே வந்த பைக் மீது சற்றும் எதிர்பாராமல் கார் மோதுகிறது. பைக் ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே மரணடைகிறார்.
பயத்தில் என்ன செய்வது என்று புரியாத நிலையில் இறந்தவரின் உடலை உடலை தனது கார் டிக்கியில் ஏற்றி பயணத்தைத் தொடர்கிறார் சதீஷ். இடையில் போலீஸ் செக் போஸ்ட்…
திடீரென டென்ஷன் ஆனால் வார்த்தைகள் குளறி வாய் திக்குவது சதீஷ்க்கு ஏற்படும் வழக்கம். இன்ஸ்பெக்டர் விசாரிக்கும் போது சதீஷுக்கு வாய் திக்குவதால் இன்ஸ்பெக்டர் திக்குவாயன் என்று சொல்ல கோபத்தில் சதீஷ் அவரை மறந்து விடுகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதை கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்பு குறையாமல் சொல்லி இருக்கிறார்கள்!
சதீஷுக்குதான் அவ்வப்போது வாய் திக்குகிறதே தவிர, படத்தில் திக் திக் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை.
நகைச்சுவை வேடங்களில் ரசிக்க வைத்த சதீஷ், சமீபத்தில் சில படங்களில் கதை நாயகனாக நடித்தார்.
ஆனால் ஒரு விதத்தில் இந்த, சட்டம் என் கையில் படம்தான் சதீஷுக்கு ஹீரோவாக முதல் படம் என்று சொல்லலாம். நகைச்சுவையின் சாயலே இன்றி, சீரியஸ் ரோலில் அப்படி அசத்தி இருக்கிறார். போலீஸைப் பார்த்து பயப்படுவது, டென்சனில் வாய் திக்குவது, தான் சிக்கிக் கொள்வோமோ என்கிற நிலையில் அதிரடியாக ஏதாவது செய்து கவனத்தைத் திருப்பது என தன் பங்களிப்பை வெகு சிறப்பாக செய்து ஏற்ற கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
குறிப்பாக டூயட் பாடாமல், சண்டைக் காட்சிகளில் அதிரடி ஆக்ஷன் காட்டாமல், நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறார் சதீஷ்.
காவல்துறை உதவி ஆய்வாளராக வரும் அஜய் ராஜ் கம்பீரமான தோற்றம், மிடுக்கான நடிப்பு, உயர் அதிகாரிகளிடம் காட்டும் பவ்யம், தனக்குக் கீழ் பணி புரியும் அதிகாரி, திமிராக நடக்க.. அவரை பழி வாங்கும் விதம் அனைத்தையும் காட்சிப் படுத்திய விதம் அருமை.
குறிப்பாக பாவெல் நவகீதனை டீ கொண்டு வரச் செய்து, அதை லாக்கப்பில் இருக்கும் சதீஷிடம் கொடுக்கச் சொல்லும் காட்சியில் கவனம் ஈர்க்கிறார்.
சிறிய வேடம் என்றாலும் முத்திரை பதிக்கும் விதத்தில் நடிக்கும் பாவெல் நவகீதன், படம் முழுக்க வரும் வலுவான வேடம் என்றால் கேட்கவா வேண்டும்? சும்மா மிரட்டி இருக்கிறார். கிண்டலான பேச்சு, திமிரான உடல் மொழி, விசாரணை என்ற பெயரில் காட்டும் ஆவேசம் என அனைத்துமே சிறப்பு.
சில படங்களில் மட்டுமே கதாநாயகனையும் வில்லனையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு சில பாத்திரங்கள் அமைந்திருக்கும். சட்டம் என் கையில் படத்தில் பாவெல் நவகேதன் ஏற்றிருக்கும் பாத்திரம் அப்படி அமைந்த பாத்திரம் தான்.
மைம் கோபி, இயக்குநர் இ.ராமதாஸ், ரித்திகா, வித்யா பிரதீப், அஜய் ஜெஸ்ஸி, பவா செல்லதுரை உள்ளிட்டோர் சிறிய வேடங்களில்தான் வருகிறார்கள் என்றாலும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் தான் நடக்கிறது என்காலம் அவை அனைத்தையும் தெளிவாகப் படம் பிடித்து இருக்கிறது பி.ஜி. முத்தையாவின் கேமரா.
எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. ஆனால் பின்னணி இசை படத்துக்கு பலம்.
காட்சிகளை முன்னுக்குப் பின் கலைத்துப் போட்டிருந்தாலும், நான் லீனியர் முறையில் கதை சொன்ன படத்தொகுப்பாளர் மார்டின் டைட்டஸ் பாராட்டுக்குரியவர்.
ஒரே இரவில் நடக்கும் க்ரைம் த்ரில்லரை, சிறப்பாக நேர்க்கோட்டில் கொண்டுபோய் ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் சாச்சி. எந்தவொரு கதாபாத்திரமும் வீண்டிக்கப்படாமல், மிகச் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர். பாராட்டுக்கள்.
ரசிக்கும்படியான க்ரைம் த்ரில்லரை அளித்த படக்குழுவுக்கு வாழ்த்துகள்.
மொத்தத்தில் அனைவரும் பார்த்து ரசிக்கலாம்… சட்டம் என் கையில்!
மதிப்பெண்: 3.5/5