![]()
மை லார்ட் _ விமர்சனம்
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து சில திரைப்படங்களின் கதை அம்சங்கள் தொட்டுச் சென்றது உண்டு.
ஆனால் முதல் முறையாக இதில் உள்ள வணிகத்தையும், மனசாட்சியே இல்லாத அதிகாரம் மிக்கவர்களால் அப்பாவி ஏழைகள் அநியாயத்துக்கு ஏமாற்றப்படுவதையும் அப்பட்டமாக முகத்தில் அறைந்தாற்போல் சொல்லுகிறது ‘மை லார்ட்’
திரைப்படம்.
மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ஆஷா சரத்திற்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டதால் உடனடியாக மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
இதற்காக கோவில்பட்டியில் வசித்து வரும் ஏழை தொழிலாளி சசிகுமார் குறிவைக்கப்படுகிறார்.
ரகசியமாக இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆஷா சரத் தரப்பு ஆட்கள் செய்ய ஆரம்பிக்க, அதனால் ஏற்படும் தொடர் சிக்கல்கள்தான் இந்தப் படம்.
சசிகுமார் அறிமுகமாகும் போதே அவருக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்க, பிணவறையில் இருந்து அவர் உயிருடன் எழுந்து வந்து நடனம் ஆடும் காட்சி பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
அப்பாவித்தனம், மனைவி மீது கொண்ட நேசம் என்று நடிக்க வாய்ப்பு கிடைத்த அத்தனை இடங்களிலும் ஸ்கோர் செய்கிறார் சசிகுமார்.
அவரது மனைவியாக வரும் சைத்ரா அறிமுகமாகும் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்து நம் நெஞ்சில் நிறைகிறார்.
மனதுக்குப் பிடித்தவனை கணவனாக கரம் பிடிக்க காட்டும் பிடிவாதமாகட்டும், உடல்நல பிரச்சனையோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் போராட்டமாகட்டும், அத்தனை காட்சிகளிலும் முத்திரை பதிக்கிறார் சைத்ரா.
பத்திரிகையாளராக வரும் குரு சோமசுந்தரம், வழக்கறிஞராக வரும் இயக்குனர் கோபி நயினார் போன்றவர்களின் நடிப்பும் கச்சிதமாக அமைந்திருக்கிறது.
கண்முன் நடக்கும் சம்பவங்களை காட்சிப்படுத்தியதுபோல் மிக இயல்பாக அமைந்திருக்கிறது நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு.
ஷான் ரோல்டன் இசையில் உருவான பாடல்கள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
இரண்டாம் பகுதியில் வரும் பல காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டது போல் தோன்றுவதை இயக்குனர் ராஜு முருகன் தவிர்த்திருக்கலாம்.
சசிகுமார் நடித்த படம் என்றால் நிச்சயம் தரமாகத்தான் இருக்கும் என மீண்டும் ஒருமுறை ‘மை லார்ட்’ படம் மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
தவறவிடாமல் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தரமான படம் ‘மை லார்ட்’.
மதிப்பெண் 3.75/5


