![]()

நிறம் மாறும் உலகில் _ விமர்சனம்
கண்டிப்பு மிக்க தாய் விஜி சந்திரசேகரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் மகள் லவ்லின்.
தோழியின் வீட்டில் தங்குவதற்காக ரயிலில் புறப்படுகிறார் லவ்லின். டிக்கெட் பரிசோதகராக ரயிலில் வரும் யோகி பாபு, லவ்லின் மூட் அவுட் ஆகி இருப்பதை பார்த்து மெதுவாக அவருடன் பேச்சு கொடுத்து, தாயிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வந்ததை அறிந்து கொள்கிறார்.
பெற்ற தாய் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தான் அறிந்த சில கதைகளை சொல்லி லவ்லினுக்கு புரிய வைக்கிறார் யோகி பாபு.
தமிழ்நாட்டில் இருந்து மும்பை சென்று மிகப் பெரிய தாதாவாக உருவெடுத்த நட்டி, சிறுவயதில் தன் தாய் பாலியல் தொழில் செய்து தன்னை வளர்த்ததை மறக்க முடியாமல், தற்போது பாலியல் தொழிலாளியிடமே தாய் அன்பை தேடுகிறார். இது முதல் கதை.
இரண்டாவது கதை மீனவர் ரியோவைப் பற்றியது. தந்தை இழந்த ரியோவை கஷ்டப்பட்டு படிக்க வைத்து, கலெக்டர் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் அவரது தாயார்.
இந்த நிலையில் கேன்சர் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் தாயாரைக் காப்பாற்ற லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது ரியோவுக்கு.
பண உதவி கேட்க மைம் கோபியிடம் சென்ற போது இரண்டு நபர்களை கடத்தி வந்தால்தான் பணம் கிடைக்கும் என்று சொல்கிறார் மை கோபி.
இப்போது என்ன முடிவெடுக்கிறார் ரியோ என்று விரிகிறது இந்தக் கதை.
மூன்றாவது கதையில் இரண்டு மகன்களை பெற்றெடுத்தும் யாருடைய ஆதரவும் இல்லாமல் வாழும் வயது முதிர்ந்த பாரதிராஜா வடிவுக்கரசி பற்றிய கதை.
காசு பணம் இல்லை என்றாலும் ஒருவர் மீது ஒருவர் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் காதலோடு வாழ்க்கையின் இறுதி பகுதியை கழிக்கின்றனர்.
நான்காவது கதையில் யாருமற்ற அனாதையாக வாழும் சாண்டியும், மகன் மற்றும் மருமகளால் முதியோர் இல்லத்துக்கு அனுப்பப்பட்ட துளசியும் எதிர்பாராமல் சந்திக்கின்றனர். ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்க்கையை கழிக்க முடிவு செய்கின்றனர்.
இவர்களால் தொடர்ந்து மகிழ்ச்சிகரமாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிந்ததா என்பது இந்த கதையின் இறுதி பகுதி.
இந்தக் கதைகளில் தாய்ப்பாசத்தின் முக்கியத்துவம் மட்டுமின்றி, மனித உறவுகளின் சிக்கல்களையும் திறம்பட கையாண்டு விளக்கி இருக்கிறார் இயக்குனர் ஜே பி பிரிட்டோ.
வடிவுக்கரசி பாரதிராஜா கதைப்பகுதி நெகிழ வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.
மல்லிகா அர்ஜுன் மணிகண்ட ராஜா இருவரும் இணைந்து படத்தை ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். கண்களை உறுத்தாவண்ணம் கதைக்கும் காட்சிக்கும் ஏற்ற வகையில் ஒளி அமைப்பு செய்து படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறார்கள் இந்த இரட்டையர்கள்.
நான்கைந்து கதைகள் என்றாலும் அதை நேர்த்தியாக தொகுத்து அழகான மாலை ஆக்கி கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் தமிழரசன்.
பல கதைகளும் ஏராளமான பாத்திரங்களும் இருக்கின்றன என்றாலும் அனைத்து பாத்திரங்களுமே மனதில் பதிவது போல் வடிவமைக்கப்பட்டு இருப்பது படத்தின் சிறப்பு.
தரமான இந்தப் படத்தை தாராளமாக அனைவரும் கண்டு ரசிக்கலாம்.
மதிப்பெண் 3.5/5
