Friday, May 1

நிழற்குடை _ விமர்சனம்

Loading

நிழற்குடை _ விமர்சனம்

கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பே சிதைந்து வரும் நிலையில்,  பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கும் பணி செய்யும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளின் வளர்ப்பில் உள்ள சிக்கல்களை அழுத்தமாக பதிவு செய்கிறது நிழற்குடை.

ஈழத்தில் நடந்த இறுதிப் போரில் தன் குழந்தை மற்றும் குடும்பத்தை பறிகொடுத்த தேவயானி, தமிழ்நாடு வந்து முதியோர் இல்லம் ஒன்றில் பணி செய்கிறார்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் விஜித் மற்றும் கண்மணி தம்பதியருக்கு எப்படியாவது அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய கனவு.

இத்தம்பதியினர் தங்கள் குழந்தையின் பிறந்த நாளை கொண்டாட முதியோர் இல்லம் வருகின்றனர்.
அப்போது தேவயானியின் அன்பான அணுகுமுறைகளை கண்டு தங்கள் குழந்தையை பார்த்துக் கொள்ள அவரை தங்கள் இல்லத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.

தான் பெற்ற குழந்தையைப் போல் கண்ணும் கருத்துமாக அந்தக் குழந்தையை பார்த்துக் கொள்கிறார் தேவயானி.

விஜி கண்மணி இருவருக்கும் அமெரிக்கா செல்வதற்கான விசா கிடைத்து விடுகிறது.

பயண ஏற்பாடுகளை இருவரும் கவனித்துக் கொண்டிருக்கும் போது தேவயானி தங்களுடன் வருவார் என்று அந்தக் குழந்தையும் நம்பிக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் திடீரென குழந்தை காணாமல் போகிறது. போலீசாரில் விசாரணை வளையத்தில் தேவயானியும் சிக்குகிறார்.

தேவயானி அதிலிருந்து மீண்டாரா? உண்மையில் குழந்தை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள் என்பது படத்தின் பிற்பகுதி.

இந்த காலத்துக்கு அவசியமான கதையை அழகாக படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் சிவ ஆறுமுகம்.

கருப்பு வெள்ளை காலத்து கே எஸ் கோபாலகிருஷ்ணன் படத்தைப் போல, சமீப கால இயக்குனர் விசுவின் படத்தைப் போல குடும்பத்துடன் பார்த்து மகிழத்தக்க தரமான படமாக அமைந்திருக்கிறது நிழற்குடை.

காட்சிகளுக்கு ஏற்ற வகையில் கச்சிதமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் குருதேவ்.

நரேன் பாலகுமாரின் இசையில் உருவான பாடல்கள் நெஞ்சை வருடுகின்றன.

தேவயானி பேசும் ஈழத்தமிழ் முழுமையாக இல்லை. அவ்வப்போது தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழும் எட்டிப் பார்க்கிறது.

துவக்கத்திலிருந்து குழந்தை கடத்த வரும் வில்லன் போன்ற ஒருவரை கடைசியில் மெத்தட் ஆக்டிங் என்று சொல்வது அபத்தமாக இருக்கிறது.

இப்படி ஓரிரு குறைகள் இருந்தாலும், குடும்பத்துடன் பார்த்து மகிழத்தக்க தரமான படம் நிழற்குடை என்பதில் ஐயமில்லை.

மதிப்பெண் 3.5/5