Tuesday, January 21

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ _ விமர்சனம்

Loading

பல ஆண்டுகளாக பத்திரிகை துறையில் அனுபவம் பெற்ற கேப்டன் எம் பி ஆனந்த் ஃப்ரைடே பிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ஒன்ஸ் அப்பான டைம் இன் மெட்ராஸ்.

ராணுவ குடியிருப்புக்கு அருகில் உள்ள குடிசை பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், அங்குள்ள மாமரத்தில் மாங்காய் பறிக்கும் என்ற போது துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தான்.

தமிழகத்தையே பதைபதைவைக்க வைத்த இந்த சம்பவம் செய்திகளில் பரபரப்பானது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கூவத்தில் போலீசார் கைப்பற்றினர்.

கூவம் ஆற்றில் வீசப்பட்ட துப்பாக்கி வளைகரம் ஒன்றில் சிக்கினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவாகியிருப்பதுதான் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’.

நான்கு கதைகள் கொண்ட இந்த ஆந்தாலஜி மிகவும் விறுவிறுப்பான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டு அருமையாக படமாக்கப்பட்டு இருக்கிறது.

முதல் கதையில் சுகாதாரப் பணியாளரான அபிராமி தன் மகனை வட்டிக்கு கடன் வாங்கியாவது டாக்டருக்கு படிக்க வைக்க நினைக்கிறார். அந்த மகனோ திருநங்கையாக மாறிக் கொண்டிருக்கிறான்.

அபிராமி கையில் துப்பாக்கி கிடைக்கிறது மகனை பாலியல் பலாத்காரம் செய்தவனை அபிராமி என்ன செய்தார் என்கிறது முதல் கதை.

மற்றொரு கதையில் ஆட்டோ டிரைவரான பரத் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தன் மனைவியை காப்பாற்ற துடிக்கிறார். அவரது கைக்கும் ஒரு துப்பாக்கி வருகிறது.

இந்தத் துப்பாக்கியால் கூலிக்காக கொலை செய்த பரத்துக்கு எதிர்பாராத பேரிடி தலையில் வந்து விழுகிறது. அது என்ன?

மூன்றாவது கதையில் ஆசைக்கனவுகளுடன் புதுமண வாழ்வில் அடியெடுத்து வைத்த பெண்ணின் கனவுகள் சுக்கு நூறாகி சிதறுண்டு போகிறது.

தன் கர்ப்பத்துக்கு காரணம் கணவன் அல்ல மாமனார் என்று தெரிய வருகிறது.இவரது கையில் வந்த துப்பாக்கி யாரை தொலைத்தெடுத்தது?

ஜாதி வெறி மிக்க அப்பா ஒருவர் தன் மகள் காதல் திருமணம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அப்பாவை மீறி மகள் திருமணம் செய்ய  பதிவு அலுவலகம் செல்லும் போது நடக்கும் சம்பவங்கள் அடுத்த கதையாக விரிகிறது. இங்கும் அந்த துப்பாக்கி ஒரு உயிரைக் குடிக்கிறது.

இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக இருந்தாலும்,  ஒரு துப்பாக்கி என்ற மையப் புள்ளியில் இவை இணைக்கப்படுகின்றன.

நேர்கோட்டில் கதையை சொல்லாமல் நான்_ லீனியர் முறையில் இயக்குனர் பிரசாத் முருகன் கதையை சொல்லி இருப்பது வெகு சிறப்பாக அமைந்திருக்கிறது. இதற்கு படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் பெரிய அளவில் உதவி செய்திருக்கிறார்.

ஜெகன் கவிராஜ் பேனா முனையில் உருவான பாடல்களும் பல வசனங்களும் கவனிக்க வைக்கின்றன.

படத்தில் நிறைய பாத்திரங்கள் இருந்தாலும் அவை அனைத்துமே நம் நினைவில் பதியும் அளவுக்கு வலுவாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக சமூக செயற்பாட்டாளராக வரும் கனிகா,  அவருக்கு ஏற்பட்ட முடிவு,  அந்த முடிவால் பரத் மனைவி எவ்வாறு பாதிக்கப்படுகிறார் என்று கதையை  இயக்குநர் கொண்டு சென்ற விதம் ரசிக்க வைக்கிறது.

பரத்தும் அபிராமியும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து முத்திரை பதிக்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

குறிப்பாக அபிராமி தன் மகன் திருநங்கை ஆவதை உணர்ந்து ஆதரவுடன் பராமரிக்கும் காட்சிகளி்ல் சிறப்பாகவே நடித்திருக்கிறார். கே எஸ் காளிதாஸ் மற்றும் கண்ணா ஆகியோரின் ஒளிப்பதிவு படத்துக்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

நான்_லீனியர் முறையில் தெளிவாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லப்பட்ட ‘ஒன்ஸ் அப்பான டைம் இன் மெட்ராஸ்’ திரைப்படத்தை அனைவரும் கண்டு ரசிக்கலாம்.

மதிப்பெண் 3.5/5