Monday, April 13

அதர்ஸ் _ விமர்சனம்

Loading

சில படங்களில் தலைப்புக்கும், படத்தின் உள்ளடக்கத்திற்கும் சற்றும் தொடர்பு இருக்காது.

ஆனால் மிகச் சில படங்கள் கதையுடன் அற்புதமாக பொருந்தி போகும். இந்த இரண்டாம் வகைப் படம்தான் அதர்ஸ்.

ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் நள்ளிரவில் வரும் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகிறது.

அதில் இருந்தவர்கள் மூன்று பெண்களும் ஒரு ஆணும் தீயில் எரிந்து மரணமடைகிறார்கள்.

இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி ஆதித்ய மாதவன் வருகிறார்.

விசாரணையின் போது ஒவ்வொரு முடிச்சும் அவிழ அவிழ குற்றவாளியை நெருங்க வேண்டிய போலீசாருக்கு, குற்றவாளியுடன் ஏற்படும் இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறது.

ஒவ்வொரு விசாரணையும் முட்டு சந்தில் முடிவதாக அதிகாரி ஆதித்ய மாதவனே ஆதங்கப்பட்டுக் கொள்கிறார்.

இது ஒரு புறம் இருக்க, மிகப்பெரிய தனியார் மருத்துவமனையில் செயற்கை முறை கருத்தரிப்பில் ஏற்படும் மிகக் கொடுமையான குற்றத்தை அங்கு பணியாற்றும் மருத்துவர் கௌரி கிஷன் யதேச்சையாக கண்டுபிடிக்கிறார்.

வேன் விபத்தில் இறந்தவர்களுக்கும் மருத்துவமனையில் நடக்கும் குற்றங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதுதான் அதர்ஸ் படத்தின் கதை.

படத்தை துவக்கத்திலிருந்து இறுதிவரை சற்றும் விறுவிறுப்பு குறையாமல் கொண்டு செல்கிறார் இயக்குனர் அபின் ஹரிஹரன்.

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

ஆதித்ய மாதவன் மிடுக்கான தோற்றமும் உடல் மொழியும் காவல் அதிகாரி வேடத்திற்கு கனகச்சிதமாக பொருந்துகிறது.

இவரது தோற்றமும் நடிப்பும் மேலும் பல நல்ல வாய்ப்புகளை இவருக்கு தேடித்தரும் என்று தோன்றுகிறது.

வெறுமனே டூயட் பாடிவிட்டு போகாமல் வலுவான பாத்திரத்தில் திறம்பட நடித்திருக்கிறார் கௌரி கிஷன்.

பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் பார்த்த நண்டு ஜெகன் மிக முக்கியமான பாத்திரத்தில் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி அருமையாக நடித்திருக்கிறார்.

பெண் போலீஸ் அதிகாரியாக வரும் அஞ்சு குரியன், காவலராக வரும் முண்டாசுப்பட்டி ராமதாஸ் இருவருமே கொடுக்கப்பட்ட வேடத்தை நிறைவாகவே செய்திருக்கின்றனர்.

நல்லதொரு சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கும் அதர்ஸ் திரைப்படம் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.

மதிப்பெண் 3.5/5