Sunday, July 19

பெத்தி _ விமர்சனம்

Loading

பெத்தி _ விமர்சனம

’ராம் சரணின் மிரட்டல் பிளாக்பஸ்டர் என்று பத்து படத்தை ஒரே வரியில் சுருக்கமாக விமர்சனம் செய்து விடலாம்.

புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் – ஜான்வி கபூர் கூட்டணியில் உருவான ‘பெத்தி’ தியேட்டர்களை அதிரவைக்கும் அட்டகாசமான படமாக தூள் கிளப்பிக்  கொண்டிருக்கிறது.

லப்பர் பந்து படத்தின் கிரிக்கெட் எமோஷனையும், பைசன் படத்தின் குஸ்தி ஆக்ஷனையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்த ஒரு வெறித்தனமான அனுபவத்தை இந்தப் படம் கொடுத்திருக்கிறது!

படத்தின் மெயின் ஸ்டோரி:
விஜயநகரம் தாண்டிய ஒரு மலைக்கிராமம். அங்கே 1800-க்கும் மேற்பட்ட மக்கள் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் வாழ்கிறார்கள். கண் முன்னாடி ரயில் போனாலும், அந்த ஊரில் நிற்காது. கிலோமீட்டர் கணக்கில் நடந்தே செல்லும் அவலம். இந்த ஊரில் பிறந்து, கூலி கொடுத்தால் யாருக்காகவும் மேட்ச் ஆடக்கூடிய ஒரு ‘ஆட்டக்கூலி’ தான் நம்ம பெத்தி (ராம் சரண்).

கிரிக்கெட்டில் கிங்காக இருந்தாலும், அங்கே தலைதூக்கும் சாதியப் பிரச்னை பெத்தியின் அடையாளத்தை அசிங்கப்படுத்துகிறது. இன்னொரு பக்கம், ‘அப்பளசூரி’யாக வரும் ஜெகபதி பாபுவுக்கு நடக்கும் சில சம்பவங்கள் பெத்தியை குஸ்தி கோச் சிவராஜ்குமாரிடம் கொண்டு சேர்க்கிறது. நேஷனல் சாம்பியனாக மாறி தன் ஊருக்கு ரயில் நிலையத்தையும், அடையாளத்தையும் பெற்றுத்தர பெத்தி போராடும்போது விதி விளையாடுகிறது. “இனி விளையாடவே முடியாது” என்ற சூழலில் பெத்தி சாதித்தாரா, இல்லையா என்பதுதான் கிளைமேக்ஸ் ட்விஸ்ட்!

படத்தின் உயிர்நாடி வசனம்:
“இந்தியாவில் இன்னும் 18 ஆயிரம் கிராமங்கள் எந்தவொரு அடையாளமும் இல்லாமல் இருக்கின்றன!”

மாஸ் பிளஸ் & கிரிஸ்ப் மைனஸ்
ராம் சரணின் வெறித்தன உழைப்பு: ஃபர்ஸ்ட் சீன் டூ லாஸ்ட் ஃபிரேம்… மனுஷன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொட்டியிருக்கிறார். கிரிக்கெட் மைதானத்தில் மல்யுத்த வித்தையைக் காட்டி அவர் எடிட்டிங்கில் மிரட்டும் இடங்கள் தியேட்டர் மெட்டீரியல்!

ஏ.ஆர். ரஹ்மானின் மியூசிக் ட்ரீட்: படத்திற்குத் தன் பின்னணி இசையால் உயிர் கொடுத்திருக்கிறார் இசைப்புயல்.

ரத்னவேலுவின் கேமரா மேஜிக்: அந்த மலைக்கிராமம், ரயில் காட்சிகள், குஸ்தி சண்டைகள், கிளைமேக்ஸ் ஓட்டப் பந்தயம் என எல்லாவற்றையும் கேமராவில் அள்ளியிருக்கிறார்.

காதல் காட்சிகளின் தொய்வு: முதல் பாதியில் ஹீரோயின் ஜான்வி கபூரின் கவர்ச்சி சீன்களும், பெர்மிஷன் இல்லாமல் உதட்டில் முத்தம் கொடுக்கும் இடமும் படத்திற்குப் பெரிய ஸ்பீடு பிரேக்கர்.

கமர்ஷியல் சமரசம்: காதல் டிராக்கை குறைத்துவிட்டு, ராம் சரணின் ஸ்போர்ட்ஸ் மற்றும் போராட்டக்களத்தில் மட்டும் இன்னும் வேகம் காட்டியிருக்கலாம்.

ஃபைனல் பஞ்ச்:
“கஷ்டப்பட்டு வரும் நபர்கள் தான் வாழ்வில் சாதனைகளைப் படைக்க முடியும்” என்பதை ரத்தமும் சதையுமாக, எமோஷனலாகச் சொல்லியிருக்கிறது பெத்தி. சில காதல் காட்சிகள் சொதப்பினாலும், கிளைமேக்ஸ் ஸ்போர்ட்ஸ் டிராக்கும், ராம் சரணின் மெனக்கெடலும் படத்தை வேற லெவலுக்குக் கொண்டு சென்றுவிட்டது. ராம் சரணின் கரியரில் இதுவொரு கேரண்டி பிளாக்பஸ்டர்!