![]()

பி.டி. சார் _ விமர்சனம்
பள்ளி, கல்லூரி என பல கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார் தியாகராஜன்.
அவரது பள்ளி ஒன்றில் பிடி ஆசிரியராக பணியாற்றி வரும் ஹிப் ஹாப் ஆதியை அவரது தாயார் சிறு வயதிலிருந்தே பொத்திப் போர்த்தி வளர்த்து வருகிறார்.
காரணம் எந்த ஒரு சின்ன சண்டை சச்சரவில் ஆதி சிக்கினாலும், அவரது வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று ஒரு ஜோதிடர் சொல்லி இருப்பது தான்.
ஆதியின் திருமண நிச்சயதார்த்தத்தின் போது அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளம்பெண் அனிகா சுரேந்திரன் காணாமல் போகவே, அவரை தேடிச் செல்கிறார் ஆதி.
காணாமல் போன அனிகா சுரேந்திரன் கிடைத்துவிட்டாலும் தொடர்ந்து நடந்த பல சம்பவங்கள் நிலைமையை சிக்கலாகுகிறது.
இதன் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார் அனிகா சுரேந்திரன்.
தியாகராஜன் நடத்தும் கல்லூரி ஒன்றில் பயின்று வருபவர்தான் அனிகா சுரேந்திரன்.
தற்கொலை செய்து கொண்ட அனிகா கடிதம் ஒன்றை எழுதி வைத்திருக்கிறார். அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது? அவரது தற்கொலைக்கு காரணம் என்ன? என்பதையெல்லாம் அறிய களத்தில் இறங்கி புலனாய்வு செய்கிறார் ஆதி.
அவரது முயற்சி பலித்ததா என்பதே மீதிக்கதை.
உடற்பயிற்சி ஆசிரியராக வரும் ஆதி, மிகச் சிறப்பாக நடித்துள்ளார். மாணவர்களிடம் காட்டும் அன்பு, காதலியிடம் தன்னை வெளிப்படுத்த காட்டும் தயக்கம், அம்மா சொல்லைத் தட்டாத பிள்ளையாக பணிவு, பிறகு அதே அம்மா சொல்லியும் கேட்காமல் வில்லனுக்கு எதிராக பொங்குவது என சிறப்பாக நடித்து உள்ளார்.
சண்டைக் காட்சிகளிலும் அனல் தெறிக்க நடித்து உள்ளார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் இளம் பெண்ணாக வருகிறார் அனிகா. தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் சொல்லி குமுறுவது, அவர்களும் இவரையே குற்றம் சொல்ல ஆற்றாமையில் பொங்குவது என கவர்கிறார்.
நாயகி காஷ்மீராவுக்கு பெரிதாக வாய்ப்பில்லை என்றாலும், கிடைத்த வாய்ப்பை குறைவின்றி செய்திருக்கிறார்.
இளவரசு, தியாகராஜன் என அனைவருமே பாத்திரம் அறிந்து நன்கு நடித்து உள்ளனர்.
பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பின்னணி இசையும், கதையோட்டத்துடன் கூடவே வந்து ரசிக்க வைக்கிறது.
குறிப்பாக அச்சமில்லை அச்சமில்லை இசை, மனதைத் தொடுகிறது.
மாதேஷ் மாணிக்கத்தில் ஒளிப்பதிவு மற்றும் பிரசன்னாவின் எடிட்டிங் ஆகியவையும் படத்துக்கு பலம். பேருந்தில் தொடங்கி பொது இடம், பணி செய்யும் இடம், என பல இடங்களிலும் பெண்களுக்கு நிகழும் பாலியல் சீண்டல்களை சவுக்கடி போன்ற வசனத்தின் மூலம் வெளிப்படுத்தி இருப்பது பிரமாதம்.
பெண்கள் தங்கள் தயக்கத்தை உடைத்துப் பேச முன்வரும்போது மட்டுமே சமூகத்தின் பார்வை மாறும் என்பதை இதைவிட எளிமையாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்க முடியாது. பள்ளியில் படிக்கும் சிறுவனே தன் ஆசிரியையை காதலிப்பதாக சொல்வது, அதுவும் ஆசிரியயையின் தந்தையிடமே சொல்வது போன்ற காட்சிகளை எல்லாம் தவிர்த்து இருக்க வேண்டும்.
இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் பாஸ் மார்க் வாங்கி தேறிவிட்டார்.
சமூக அக்கறையோடு உருவாகி உள்ள பி.டி. சார் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.

