![]()
ரகசிய சினேகிதனே_ விமர்சனம்
வேல்முருகன், ஸ்வேதா ஸ்ரீம்டன், குரு பிரகாஷ், பாக்கியராஜ், பிரதீபா, பிரசாந்தினி, நிஷா, கந்தவேலு
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சேகர் கன்னியப்பன்.
தயாரிப்பு லதா சேகர்.
ஒளிப்பதிவு ஷாம்ராஜ்,
இசை டாக்டர் சுரேஷ், எஸ்.சுப்பிரமண்யா,
மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.
***
சமூக ஊடகங்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் நல்லதொரு குடும்பம்கூட எவ்வாறு சிதறுண்டு போகும் என்பதை சுவைபட விவரிக்கும் படம்தான் ரகசிய சினேகிதனே.
தனது கணவர் குரு பிரகாஷுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வரும் ஸ்வேதா ஸ்ரீம்டனுக்கு ஸ்மார்ட் போன் மீது ஆசை.
தான் மிகச் சாதாரண பட்டன் போனை பயன்படுத்தினாலும், ஆசை மனைவி கேட்டதற்காக ஸ்மார்ட்போனை வாங்கி தருகிறார் கணவர்.
பொழுதுபோக்காக சமூக ஊடகத்தை பயன்படுத்த தொடங்கிய ஸ்வேதாவுக்கு பாண்டிச்சேரியில் உள்ள பல் டாக்டர் வேல்முருகனுடன் பழக்கம் ஏற்படுகிறது.
ரகசிய ஸ்நேகிதன் ஆகிவிட்ட அவருடன் தனது ஓய்வு நேரத்தில் சேட் செய்ய தொடங்கி, கடைசியில் அதற்கு கிட்டத்தட்ட அடிமையாகி விடுகிறார் ஸ்வேதா.
மனைவி மீது சந்தேகக் கண் கொண்டு அவரை கண்காணிக்க துவங்குகிறார் கணவர் குரு பிரகாஷ்.
ஒரு நாள் திடீரென ஸ்வேதாவை பார்க்க வந்துவிடுகிறார் அந்த ரகசிய சினேகிதன்.
சமூக ஊடகத்திலிருந்து தன் மனைவியை கணவனால் காப்பாற்ற முடிகிறதா இல்லையா என்பதுதான் ரகசிய சினேகிதன் படத்தின் கதை.
ஸ்வேதாவுக்கும் பல் டாக்டர் வேல் முருகனுக்கும் உள்ள சிநேகத்தை நாகரிகமான முறையில் கொண்டு செல்லும் இயக்குனர் சேகர் கன்னியப்பன் பாராட்டுக்குரியவர்.
படத்தின் கதை வசனத்தை எழுதி இருப்பதும் இவர்தான்.
ஆனால் ஸ்வேதாவும் வேல்முருகனும் whatsapp மூலமாகவே சேட் செய்கிறார்கள் என்று காட்சிகள் சித்தரிப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
போன் நம்பர் இருந்தால்தான் வாட்ஸ் அப்பில் சேட் செய்ய முடியும்.
ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்ட்டா என்று ஏதேனும் ஒரு செயலி மூலம் இருவரும் சேட் செய்கிறார்கள் என்று காட்சிப்படுத்தி இருந்தால்தான் சரியாக இருந்திருக்குமே? காரணம் இதுபோன்ற செயலிகள் இருந்தால்தான் போன் நம்பரை கொடுக்காமலே சேட் செய்ய முடியும்.
டாக்டர் சுரேஷ் மற்றும் எஸ் சுப்பிரமண்யாவின் இசையும், சாம் ராஜின் ஒளிப்பதிவும் படத்துக்கு தேவையான பங்களிப்பை வழங்கி இருக்கின்றன.
காமத்தில் முடியாதவரை எந்த காதலும் கள்ளக் காதல் அல்ல என்று படத்தின் இறுதியில் ஒரு டைட்டில் கார்டு வருகிறது.
மொத்த கதையும் இந்த கருத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப interestஆன படமாக வந்திருக்கும் ரகசிய சிநேகிதன் அனைவரும் கண்டு ரசிக்க கூடிய தரமான படம்.


