![]()
ரஜினி கேங்_ விமர்சனம்
ஞாபக மறதிக்காரரான கதையின் நாயகனான ரவி கிஷன் நிகழ்ச்சிகளுக்கு ஆடியோ ஏற்பாடு செய்யும் ஆடியோ செட் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
தன் காதலி திவிவிகாவுடன் இரவு ஊரை விட்டு ஓடிப்போகும் திட்டத்தில் இருக்கும் தினத்தன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த திட்டத்தையே மறந்து விடுகிறார்.
திவிவிகா போன் செய்து நினைவூட்டும்போது, தான் மைக் முன்னால் நின்று கொண்டிருக்கிறோம் என்பதையே மறந்து போனில் காதலியுடன் பேசுவது ஊர் முழுக்க கேட்கிறது.
காதலர்கள் இருவரையும் ஊரார் துரத்த, அவர்களிடம் இருந்து தப்பிக்க முனிஷ்காந்த் ஓட்டி வரும் காரில் காதலர்கள் ஏறி கொள்கின்றனர்.
சற்று தூரம் சென்றதும் ஒரு கொள்ளை சம்பவத்தை நடத்திவிட்டு நகைகளுடன் வரும் திருடன் கல்கியும் அந்த காரில் லிப்ட் கேட்டு ஏறி கொள்கிறார்.
கார் சேலத்துக்கு சென்று கொண்டிருக்கும்போது காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க, தான் வைத்திருந்த பையில் இருந்து தாலியை எடுத்துக் கொடுக்கிறார் கல்கி.
ஆனால் அந்த தாலிக்கு சொந்தக்காரரான பெண் இறந்து போய் தற்போது ஆவியாக சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று கதையை வேறு ட்ராக்கில் கொண்டு போகிறார் இயக்குனர் ரமேஷ் பாரதி.
இறந்து போன அந்த தாலிக்கு சொந்தக்கார பெண்ணின் ஆவி நாயகி திவிவிகாவை பிடித்துக் கொள்கிறது.
ஆவி பிடித்த பெண்களையும் ஆண்களையும் திறந்தவெளி தோட்டத்தில் அடைத்து வைத்து அவர்கள் மீதுள்ள பேயை விரட்டுவதாக சொல்லி பிழைப்பு நடத்தி வருகிறார் மொட்டை ராஜேந்திரன்.
இந்தக் கதை போதாதா நகைச்சுவை காட்சிகளை உருவாக்க?
மைக் முன்னால் நிற்கிறோம் என்ற நினைவே இல்லாமல் காதலியிடம் போனில் பேசி மாட்டிக்கொள்ளும் ரசமான காட்சியுடன் துவங்கும் நகைச்சுவைப் படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
தொடர்ந்து முனீஸ் காந்த் ஓட்டி வரும் கார்கூட அமைச்சர் ஒருவரின் ராசியான கார் என்பதால் போலீஸ் இலாக்கா தீவிரமாக அந்த காரை தேடுவதும், நாயகியின் முறை மாமனாக வரும் கூல் சுரேஷ் ஓடிப்போன காதலர்களை தேடுவதும், நல்லதொரு நகைச்சுவை படம் பார்க்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.
ஆனால் மொட்டை இராஜேந்திரன் வந்து ஆவிகளை அடக்குகிறேன் என்று சொல்லி அடிக்கும் கொட்டம் படத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் ஆக அமைந்திருக்கிறது.
நாயகன் ரஜினி கிஷன் புதுமுகம் என்றாலும் அப்பாவித்தனமான முக பாவங்களை காட்டி நகைச்சுவை காட்சிகளில் திறம்பட நடித்திருக்கிறார்.
அழகு மயிலாக வரும் நாயகி திவிவிகா பேய் பிடித்த காட்சிகளில் சிறப்பாக நடிக்கவும் செய்திருக்கிறார்.
இவர்கள் இருவருக்குமான டூயட் பாடல் காட்சியில், கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
லாஜிக் பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லாமல் ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் பாரதி.
ஆபாசமான காட்சிகளோ இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனங்களோ இல்லாமல் படத்தை உருவாக்கி இருப்பது சிறப்பு.
கவலைகளை எல்லாம் மறந்து விட்டு இரண்டு மணி நேரம் ஜாலியாக சிரித்து மகிழ்வதற்கு ஏற்ற கலகலப்பான நகைச்சுவை படம் ரஜினி கேங்.


