Monday, April 20

ரிவால்வர் ரீட்டா_ விமர்சனம்

Loading

ரிவால்வர் ரீட்டா_ விமர்சனம்

ஊரையே நடுநடுங்க வைக்கும் மிகப்பெரிய ரவுடி சூப்பர் சுப்பராயனை, முன் பகை காரணமாக ஆந்திராவில் உள்ள ரவுடி அஜய் கோஷ் திட்டமிட்டு அதற்காக கூலிக்கு கொலை செய்யும் கல்யாண் மாஸ்டரை ஏற்பாடு செய்கிறார்.

ஒரு நாள் பெண் சுகம் தேடி சென்ற சூப்பர் சுப்பராயன் தவறுதலாக கீர்த்தி சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார்.

நிறை போதையில் நிற்கும் சூப்பர் சுப்பராயன், கீர்த்தி சுரேஷின் தாயார் ராதிகாவால் தாக்கப்பட்டு இறந்து போகிறார்.

சூப்பர் சுப்பராயன் இறந்ததை தெரிந்து கொண்ட ஒரு குழு பிணத்தைக் கைப்பற்றி அஜய் கோஷிடம் பணம் பெற துடிக்கிறது.

வீட்டில் கிடக்கும் பிணத்தை அப்புறப்படுத்த கீர்த்தி சுரேஷ் தன் தாயார் ராதிகா மற்றும் இரு சகோதரிகளுடன் முயற்சி செய்கிறார்.

இதற்காகவே ஒரு காரை வாங்கி பிணத்தை ஆள் அரவமற்ற மறைவான இடத்தில் கொண்டு போய் போட்டு விட திட்டமிடுகின்றனர்.

இதற்கிடையில் முன்பு ஒரு முறை தன்னை அவமானப்படுத்திய கீர்த்தி சுரேஷை பழிவாங்க இன்ஸ்பெக்டர் ஜான் விஜயும் களத்தில் இறங்குகிறார்.

இவர்களுக்கு இடையே நடக்கும் கண்ணாமூச்சி காமெடி ஆட்டம் தான் ரிவால்வர் ரீட்டா.

கதையும் பல காட்சிகளும் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை நினைவூட்டுகிறது.

ரீட்டா என்ற டைட்டில் ரோலில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் அதிரடி ஆக்சன் காட்சிகளில் அசத்துவார் என்று எதிர்பார்த்து சென்றவர்களுக்கும் ஏமாற்றம்தான் கிடைக்கும்.

யாரும் தன்னை இன்ஸ்பெக்டர் வேடத்திற்கு இனிமேல் அழைக்கக்கூடாது என்பதற்காகத்தான் இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்றிருக்கும் ஜான் விஜய் ஓவர் ஆக்சன் செய்கிறார் போலிருக்கிறது.

எந்த வேடத்தில் நடித்தாலும் முத்திரை பதிக்கும் ராதிகா ரிவால்வர் ரீட்டா படத்தில் ஏற்ற நகைச்சுவை வேடத்திலும் சோபிக்கிறார்.

அப்பாவித்தனமாக பேசி சிக்கல்களை ராதிகா உருவாக்கும் காட்சிகள் எல்லாம் சிறப்பு.

இதற்கெல்லாம் பிராயச்சித்தம் செய்வதுபோல் இறுதிக் காட்சியில், “அத்தை சொல்கிறேன் மாப்பிள்ளை… போட்டு தள்ளுங்க…” என்று சொல்லி கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்துவது அசத்தலோ அசத்தல்.

சூப்பர் சூப்பராயன் மகனாக வரும் சுனில், எல்லோருக்கும் ‘மாமா’வான சுரேஷ் சக்கரவர்த்தி, சென்ராயன் போன்றவர்களும் நினைவில் நிற்கும்படியான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஷான் ரோல்டன் இசையும், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும் படத்துக்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

கர்மா அதன் வேலையை கண்டிப்பாக காட்டும் என்ற முன்னுரையுடன் படத்தின் துவக்கத்தில், பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இரண்டு சம்பவங்களை சொல்லிவிட்டு அதை அழகான திரைக்கதை மூலம் இணைத்து ஒரு வித்தியாசமான நகைச்சுவை படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜே கே சந்துரு.

மதிப்பெண் 3/5