Friday, January 24

ரணம் _ விமர்சனம்

Loading

ரணம் _ விமர்சனம்

மற்றும் ஒரு புலனாய்வு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ‘ரணம்’. ஆயினும் பார்த்து சலித்த புளித்துப்போன கதையாக இல்லாமல் சற்று மாறுபட்ட படமாக்க அமைந்திருப்பது ஆறுதலாக இருக்கிறது.
இறந்து போனவர்களின் சிதைந்து போன உடலை வைத்து, இறந்தவர் முகத்தை துல்லியமாக வரைந்து சொல்லும் திறமை படைத்தவர் வைபவ். அந்தப் படத்தை வைத்து காவல் துறையினர் புலனாய்வு செய்து பல வழக்குகளில் துப்பு துலக்குகின்றனர்.

ஒரு விபத்தில் வைபவ் தன மனைவியை பறிகொடுக்கிறார். அதோடு இவருக்கும் 2 வருட நினைவுகள் அழிந்து போகின்றன.

இதற்கிடையே, வெவ்வேறு இடங்களில் கை, கால்கள், முகம், உடல் என கருகிய நிலையில் சில உடல் பாகங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார். இந்த நிலையில் வழக்கை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் தன்யா ஹோப்.கிடைத்த உடல் பாகங்கள் அனைத்தும் வேறு வேறு உடல்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்பது தெரிய வருகிறது.

இறந்தவர்கள் யார், அவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற புலனாய்வுப் பாதையில் விறுவிறுப்பாக பயணிக்கிறது கதை.

நாயகன் வைபவ் சிறப்பாக நடித்து உள்ளார். விபத்து நடந்த பிறகு வாழ்க்கையில் பிடிப்பே இல்லாமல் மது அருந்தியபடி அலட்சியமாக இருப்பது, காவல்துறைக்கு உதவ படம் வரைவதில்கூட புரிதாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது என நுணுக்கமான உணர்வுகளகயும் அருமையாக செய்து தன் பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் வைபவ்.

மிடுக்கான காவல்துறை அதிகாரியாக வந்து விரைப்பு காட்டி நடித்திருக்கிறார் தன்யா ஹோப். நடை உடை பாவணையில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

நந்திதாவும் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளார்.

தவிர சரஸ் மேனன், ப்ரனிதி, சுரேஷ் சக்ரவர்த்தி, டார்லிங் மதன் என அனைவரும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.அரோல் கரோலியின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது. பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவு படத்துக்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

வழக்கமான க்ரைம் த்ரில்லர் படமாக இல்லாமல், வித்தியாசமான காட்சிகள் மூலம் மிரட்டி இருக்கிறார் இயக்குநர்
ஷெரீஃப்.

ரணம் அறம் தவறேல் – தரமான க்ரைம் த்ரில்லர் என்பதால் தாராளமாக ப் பார்க்கலாம்.

மதிப்பெண் 3/5