Monday, April 20

தடயம் இணைய தொடர் விமர்சனம்

Loading

தடயம் இணைய தொடர் விமர்சனம்

பொதட்டூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சப் இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி ஒரு திறமையான அதிகாரி.

தனது நேர்மைக்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரம் காவல்துறையில் கிடைக்காததால் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பம் செய்திருக்கிறார்.

இந்தச் சூழலில் ஆந்திரா தமிழ்நாடு எல்லை பகுதியில் பல தொடர் கொலைகள் நடக்கின்றன.

இந்தக் கொலைகளை புலனாய்வு செய்து,  கொலையாளியை கண்டுபிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷிவதாவும் சமுத்திரக்கனியும் களம் இறங்குகின்றனர்.

ஆரம்பத்தில் சமுத்திரகனியின் சில நடவடிக்கைகள் சரி இல்லாத காரணத்தால் அவரை அலட்சியப்படுத்துகிறார் ஷிவதா.

ஆனால் சமுத்திரகனி சரியான கோணத்தில் புலனாய்வு செய்வதை உணர்ந்த பிறகு, அவரது உதவியுடனே இந்த வழக்கை கொண்டு செல்ல முற்படுகிறார் ஷிவதா.

கொலையாளிகள் பிடிபட்டார்களா? எந்த காரணத்திற்காக இந்த தொடர் கொலைகள் நடக்கின்றன என்பதுதான் ஜி5 ஓ டி டி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘தடயம்’ இணைய தொடரின் மையக்கதை.

முதல் எபிசோடில் பார்வையாளர்களிடையே தொற்றிக் கொள்ளும் பரபரப்பை, கடைசி எபிசோட் வரை நீடிக்க செய்து விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார் இயக்குனர் நவீன் குமார் பழனிவேல்.

நடிப்பு உடல் மொழி என்று அனைத்திலும் மாறுபட்ட_திரைப்படங்களில் கூட இதுவரை கண்டிராத_சமுத்திர கனியை இந்த இணைய தொடரில் கண்டு ரசிக்கலாம்.

காக்கி சீருடைக்கு கச்சிதமாக பொருந்தும் ஷிவதா காவல்துறை அதிகாரியாக கம்பீரமான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்.

மிரட்டலான வில்லன்களாக வரும் ராஜ் திரந்தசு மற்றும் பிரேம் ஆகிய இருவரும் கொடூர கொலைகாரர்களாக நடித்து ஏற்ற பாத்திரத்திற்கு வெகுவாக நியாயம் செய்திருக்கிறார்கள்.

மோகன் குமார் பழனிவேல் ஒளிப்பதிவு தொடருக்கு பலம் கூட்டுகிறது.

விபின் பாஸ்கரின் பின்னணி இசை தொடருக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.

சஸ்பென்ஸ் திரில்லர் வகை படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு தடயம் நிச்சயமாக பிடிக்கும்.