தரமான தமிழ் படங்களை சமரசம் இன்றி பெரிய திரையில் கொடுத்த இயக்குனர் வசந்த பாலன் அதேபோல் சமரசம் இன்றி தலைமைச் செயலகம் என்ற இணைய தொடரை சின்னத்திரையில் கொடுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் கிஷோர் ஓர் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெறும் நிலையில் உள்ளார். இவர் சிறை சென்ற பின் முதல்வர் பதவியைப் பிடிக்க கிஷோரின் மகள் ரம்யா நம்பீசன், மருமகன் மற்றும் அரசியல் ஆலோசகர் ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் போட்டி போடுகிறார்கள்.
இதற்கிடையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு முக்கிய நபரை கொலை செய்து விட்டு தப்பி சென்ற துர்கா என்கிற பெண்ணை சிபிஐ அதிகாரியான ஆதித்யா மேனன் ஒரு பக்கம் தேடுகிறார் .
இந்நேரத்தில் ஒரு போலீஸ் கொடூரமாக கொல்லப்பட, உயர் அதிகாரியான பரத் இந்த வழக்கை விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் துர்காவை தேடும் சிபிஐ அதிகாரியான ஆதித்யா மேனனுடன் பரத் இணையும் சந்தர்ப்பம் வருகிறது . இந்த இரண்டு வழக்குகளுக்கும் தொடர்பு உண்டா அது எந்த வகையில் பிரதான கதையுடன் சம்மந்தப்பட்டது என்பதை சுவையான முடிச்சுடன் விவரிக்கப்படுகிறது.
இரண்டு தளங்களில் பயணம் செய்யும் கதை ஒரு கட்டத்தில் இணைந்து பயணம் செய்கிறது.
முதல் காட்சியில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு பெண் தன்னைத் துன்புறுத்தும் ஆண்களை வெட்டி வீழ்த்தும் காட்சியிலேயே இது வழக்கமான இணைய தொடரல்ல என்று புரிந்து விடுகிறது. எட்டு எபிசோடுகளைக்கொண்ட இந்தத் தொடர் முதல் எபிசோடில் இருந்து கடைசி வரை விறுவிறுப்பாக நகர்கிறது. இதுபோன்ற அரசியல் திரில்லர் புதிய அனுபவமாக இருப்பதை மறுக்க முடியாது.
முதலமைச்சராக முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் நடிகர் கிஷோர் நடிப்பின் புதிய பரிமாணங்களைத் தொட்டிருக்கிறார்.“கொற்றவை” பாத்திரத்தில் வரும் ஷ்ரேயா ரெட்டியும் பார்வை மட்டும் உடல் மொழியிலேயே அந்த வேடத்துக்கு உயிரூட்டுகிறார்.
ஜிப்ரானின் பின்னணி இசை தலைமைச் செயலகம் தொடருக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பகுதியாக பார்க்க வேண்டிய தொடர்தான்… ஆனால் முதல் எபிசோடைப் பார்க்க ஆரம்பித்தால் மற்ற எபிசோடையும் பார்க்கும் ஆர்வத்தை அதிகரிக்கும். அந்த அளவு சிறப்பாக அமைந்திருக்கிறது இந்த தலைமைச் செயலகம்.