Sunday, September 20

வெப்பம் குளிர் மழை _ விமர்சனம்

Loading

வெப்பம் குளிர் மழை விமர்சனம்

என்னதான் அறிவியல் வளர்ச்சி பெற்ற காலம் என்றாலும் சில மூட நம்பிக்கைகள் தொடரத்தான் செய்கின்றன. குறிப்பாக, குழந்தை பேறு இல்லை என்றால், “அதற்கு பெண்தான் காரணம்” என்று (தவறாக) தீர்மானித்து மலடி என கூறி, பெண் மனதை புண்படுத்துவது தொடரத்தான் செய்கிறது.
இந்த பிரச்சினையை அடிப்படையாக வைத்து படத்தை அளித்து உள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு தம்பதிக்கு, பல ஆண்டுகள் குழந்தைகள் இல்லை. ஊரும், மாமியாரும் அந்த பெண்ணை குற்றம் சொல்லி மனதை புண்படுத்துகிறார்கள்.

அப்பெண் தனது கணவனை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைக்கிறார். கணவனோ வர மறுக்கிறார். நீண்ட வற்புறுத்தலுக்கு பின் மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வருகிறார்.
பரிசோதனையின் முடிவில் கணவனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று தெரியவருகிறது.
மருத்துவத்தின் உதவியால் கணவனுக்கு தெரியாமல் கர்ப்பமாகி குழந்தை பெற்று கொள்கிறார் அந்தப் பெண். குழந்தை பிறந்து சில ஆண்டுகள் கழித்து இந்த உண்மை கணவனுக்கு தெரியவரும்போது தம்பதிகளுக்குள் மிகப்பெரிய பிரச்னை ஏற்படுகிறது.
அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே கதை.

ஆணாதிக்கம் கொண்ட கணவனாகவும், ஒரு தாழ்வு மனப்பான்மை கொண்ட மனிதனாகவும் நல்ல நடிப்பை தந்துள்ளார் நாயகன். நாயகி இஸ்மத் பானுவும் சிறப்பாக நடித்து உள்ளார். குறிப்பாக, “நான் மலடியா?” என்று கத்தி அழும் காட்சியில் கலங்க வைக்கிறார்.

குத்திக்காட்டும் மாமியாராக வரும், என் உயிர் தோழன் ரமாவும் இயல்பாக நடித்து உள்ளார்.
சங்கர் ரங்கராஜன் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவையும் படத்துக்கு பலம்.
குழந்தை பேறு என்பதை பெண்ணின் கடமையாக நினைக்கும் ஆணாதிக்க சமுதாயத்துக்கு சவுக்கடி கொடுத்துள்ளார் இயக்குநர்.
அனைவரும் பார்க்க வேண்டிய படம்.