டி டி நெக்ஸ்ட் லெவல் _ விமர்சனம்
ஒரே மாதிரியான காமெடி கம் பேய் படங்களை பார்த்து சலித்தவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட டி டி நெக்ஸ்ட் லெவல் படம் வேறு லெவல் நகைச்சுவை அனுபவத்தை தரும் என்பதில் ஐயமில்லை.
திரைப்படங்களை தாறுமாறாக விமர்சனம் செய்பவர்களை தனக்குச் சொந்தமான திரையரங்குக்கு வரவழைத்து கொலை செய்கிறார் பேயாக உலவும் செல்வராகவன்.
புதிய படம் ஒன்றின் பிரீமியர் ஷோவுக்கு youtube சினிமா விமர்சகரான சந்தானத்தை குடும்பத்துடன் வரச் சொல்லி அழைப்பு அனுப்புகிறார் செல்வ ராகவன்.
குறிப்பிட்ட அந்த இடத்துக்கு சென்ற சந்தானம், ஆள் அரவமற்ற அமானுஷ்ய அமைதியுடன் அந்த அரங்கம் இருப்பதைக் கண்டு பயத்துடன் திரும்பி விடுகிறார்.
ஆனால் அவரது அப்பா நிழல்கள் ரவி, அம்மா கஸ்தூரி, மற்றும் தங்கை யாஷிகா ஆனந்த் ஆகியோர் பிரீமியர் ஷோ பார்ப்பதற்கு அந்தத் திரையரங்குக்கு சென்று செல்வராகவனிடம் மாட்டிக் கொள்கின்றனர்.
அவர்களுடன் சந்தானத்தின் காதலி கீர்த்திகா திவாரியும் சிக்கி கொள்கிறார்.
இந்த சிக்கலில் வான்டட் ஆக வந்து வண்டியில் ஏறிக்கொள்கிறார் மொட்டை ராஜேந்திரன்.
சந்தானத்தின் காதலி மற்றும் குடும்பத்தினரை, திரையில் ஓடும் ஒரு சினிமாவில் சிக்க வைத்து விடுகிறார் பேயாக உலவும் செல்வராகவன்.
குடும்பத்தினரை காப்பாற்ற சந்தானமும் அதற்குள் நுழைகிறார்.
சந்தானம் அவர்கள் எல்லோரையும் காப்பாற்ற எப்படி முயற்சி செய்கிறார் என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பிரேம் ஆனந்த்.
சந்தானம் தனக்கே உரிய பாணியில் எல்லோரையும் கலாய்த்து நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது.
அதே சமயம் இயக்குனர் நெல்சனை அவர் அறிமுகப்படுத்திய கிங்ஸ்லியை வைத்தே “அவன்..” ” இவன்..” என்றெல்லாம் பேச வைத்திருப்பதை நகைச்சுவை என்று ஏற்க முடியாது.
சந்தானத்தின் அம்மாவாக வரும் நடிகை கஸ்தூரியும், யாஷிகா ஆனந்துக்கு போட்டியாக அநியாயத்துக்கு கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார். அவர் கதாநாயகியாக நடித்த காலத்தில் கூட இப்படி கவர்ச்சி காட்டி நடித்ததில்லையே?
புரியாத மொழியில் ஒருவர் பேசும்போது, ஒவ்வொரு முறையும் கீழே குனிந்து பார்த்து சந்தானம் அதற்கு அர்த்தம் சொல்கிறார்.
கீழே குனிந்து பார்த்து அர்த்தம் சொல்ல காரணம் “கீழேதானே சப்டைட்டில் போடுகிறார்கள்…” என்று சந்தானம் சொல்வது எழுத்தாளர் சுஜாதா பாணி அக்மார்க் நகைச்சுவை.
பேய் படங்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பாகவே இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஆஃப் ரோ.
க்ரூஸ் கப்பலின் வெளிப்புறத்தில் நடக்கும் காட்சிகளையும் உட்புறம் நடக்கும் காட்சிகளையும் அருமையாக மேட்ச் செய்து படத்தை ரசிக்கச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி.
திரைப்படத்துக்குள் திரைப்படமாக வரும் பேய் பங்களா அரங்கத்தில் கலை இயக்குனர் ஏ.ஆர்.மோகனின் கைவண்ணம் தெரிகிறது.
இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் சந்தானம் மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க முன்வர வேண்டும் என்று சிலம்பரசன் அழைப்பு விடுத்திருந்தார்.
ஒருவேளை அவர் ‘டி டி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை முன்கூட்டியே பார்த்ததால்தான் சந்தானத்துக்கு இந்த அழைப்பு விடுத்தாரோ?
மதிப்பெண் 2/5